ஹோம் /நியூஸ் /இந்தியா /

சென்னை மெரினா கடற்கரையிலுள்ள ஜெயலலிதா நினைவிடம் பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டுள்ளது

சென்னை மெரினா கடற்கரையிலுள்ள ஜெயலலிதா நினைவிடம் பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டுள்ளது

ஜெயலலிதா நினைவிடம்

ஜெயலலிதா நினைவிடம்

சசிகலா சென்னை திரும்பிய பிறகு ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவார் என்று கூறப்பட்ட நிலையில் தமிழக அரசு பராமரிப்பு பணிக்காக நினைவிடத்தை மூடியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  சென்னை மெரினா கடற்கரையிலுள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.

  2016ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல், மெரினா கடற்கரை ஓரத்தில் எம்ஜிஆர் சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்து, இதற்கான நிதியை ஒதுக்கியது. இதனைத் தொடர்ந்து, கட்டுமானப்பணியை 2018ஆம் ஆண்டு மே 8ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தொடங்கிவைத்தனர்.

  50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில், 57.8 கோடி ரூபாய் மதிப்பில் ஜெயலலிதா நினைவிடம் மற்றும் அதனைச் சார்ந்த கட்டமைப்புகள் அமைக்கப் பட்டுள்ளன. இந்த நினைவிடத்தில் 15 மீட்டர் உயரமும், 30.5 மீட்டர் நீளமும், 43 மீட்டர் அகலமும் கொண்ட மிகப்பெரிய பீனிக்ஸ் பறவை போன்ற வடிவத்தில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது.

  ஜெயலலிதா நினைவிட வளாகத்தில் அறிவுத்திறன் பூங்கா, நடைபாதை, 1.20 லட்சம் சதுர அடி பரப்பளவில் கிரானைட் கற்களால் அமைக்கப்பட்டுள்ள தரைப்பகுதி, புல்வெளி மற்றும் நீர்த்தடாகங்கள், சுற்றுச்சுவர், அலங்கார மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் சிற்ப கலை வேலைப்பாடுகளும் இடம்பெற்று இருக்கின்றன.

  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜெயலலிதா நினைவிடம், சசிகலா சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட ஜனவரி 27-ம் தேதி திறந்துவைக்கப்பட்டது. இந்த நினைவிடத் திறப்பு விழாவுக்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான அ.தி.மு.க தொண்டர்கள் திரண்டு வந்து வருகை தந்தனர். இந்தநிலையில், ஜெயலலிதா நினைவிடத்தில் அருங்காட்சியகம் மற்றும் அறிவுத்திறன் பூங்காவின் இறுதிக் கட்ட பணிகள் நடைபெறுவதால் பொதுமக்கள் பார்வைக்கு தடை செய்யப்பட்டுள்ளது. சிரமத்துக்கு மன்னிக்கவும்’ என்று பொதுப் பணித்துறை அறிவித்துள்ளது.

  கொரோனா சிகிச்சை முடிந்து பெங்களூருவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சசிகலா சென்னை திரும்பிய பிறகு ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவார் என்று கூறப்பட்ட நிலையில் தமிழக அரசு பராமரிப்பு பணிக்காக நினைவிடத்தை மூடியுள்ளது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Karthick S
  First published:

  Tags: Jayalalithaa memorial, Sasikala