’பினராயி 2.0’ : வாழ்நாள் சேமிப்பை நன்கொடையாக வழங்கிய ஜனார்தனனுக்கு பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு!

பீடி தொழிலாளி ஜனார்தனன்

கேரள மக்களுக்கு தடுப்பூசி வழங்க தனது வாழ்நாள் சேமிப்பை நன்கொடையாக வழங்கிய ஹீரோ ஜனார்தனனுக்கு, முதல்வர் பினராயி விஜயன் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    கேரளாவின் கண்ணூரைச் சேர்ந்த பீடி தொழிலாளியான ஜனார்தனன், கடந்த மாதம் தனது வாழ்நாள் சேமிப்பு தொகையான ரூ.2 லட்சத்தை மாநிலத்திற்கு கொரோனா தடுப்பூசிகளை வாங்குவதற்கு முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கினார். இதையடுத்து, ஜனார்தனனின் வங்கி கணக்கில் மீதம் இருந்ததோ, வெறும் ரூ.850 மட்டுமே. மக்களுக்கு தடுப்பூசி வழங்க தனது வாழ்நாள் சேமிப்பை அப்படியே அளித்து நாட்டு மக்கள் அனைவரையும் நெகிழ வைத்தார்.

    இப்படிப்பட்ட ஹூரோவை ஆச்சர்யப்படுத்தும் விதமாக கேரள அரசு அவருக்கு 500 பேர் மட்டுமே கலந்துகொள்ளும் கேரள முதல்வர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளது. இதற்காக கண்ணூரில் இருந்து 5 கி.மீ தொலைவில் அவெராவில் உள்ள ஜனார்தனின் வீட்டிற்கு நேரில் சென்ற வருவாய் துறை அதிகாரிகள் அவருக்கு பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்கான பாஸை வழங்கினர்.

    ஜனார்தனனின் சொந்த ஊரில் இருந்து பதவியேற்பு விழா நடைபெறும் மாநில தலைநகருக்கு 478 கி.மீ பயணிக்க வேண்டும். இதனால், கொரோனா கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு முதலில் பதவியேற்பு விழாவில் ஜனார்தனன் கலந்துகொள்ளவில்லை என்று கூறினார். பின்னர் தனது முடிவை மாற்றி விழாவில் கலந்துகொள்வதாக தெரிவித்தார். இதனிடையே, கொரோனா நெறிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்றி பதவியேற்பு விழாவை நடத்த வேண்டும், கொரோனா தொற்று இல்லை என்பதற்கான மருத்துவச் சான்றிதழ் வைத்திருப்பவர்களை மட்டுமே விழாவில் அனுமதிக்க வேண்டும் என கேரள உயர்நீதிமன்றம் அரசுக்கு கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதுதொடர்பாக ஜனார்தனன் செய்தியாளர்களிடம் கூறும்போது, முதல்வர் பதவியேற்பு விழாவுக்கு எனக்கு அழைப்பு வந்தது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அதுவும் மொத்தம் 500 பேர் மட்டுமே கலந்துகொள்ளும் அந்த விழாவில் எனக்கு 216வது நபராக கலந்துகொள்ள அழைப்பு வந்துள்ளது. என்னிடம் விஐபி பாஸ் உள்ளது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.

    முதலில் கொரோனா சமயத்தில் அவ்வளவு தூரம் பயணம் செய்வது என்பது சிரமமானது என்பதால், பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள வேண்டாம் என நினைத்தேன். பின்னர், மாவட்ட சிபிஎம் கமிட்டி தலைவர்கள் என்னை தொடர்புகொண்டு, விழாவில் கலந்துகொள்ள தயாராக இருக்கும்படியும், அனைத்து ஏற்பாடுகளையும் அவர்கள் பார்த்துக்கொள்வதாகவும் கூறினார்.

    இதனிடையே, என்னிடம் பேசிய முதல்வர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வது கடினமாக இருந்தால், பங்கேற்க வேண்டாம் என்றும், அவர் எப்போது கண்ணூர் வருகிறாரே அப்போது அவரே என்னை நேரில் வந்து சந்திப்பதாக கூறினார். பின்னர், முதல்வரின் அழைப்பை மறுக்கும் அளவு நான் பெரும் மனிதன் அல்ல என்று எண்ணி, அது சரியானதாகவும் இருக்காது என்பதால், எனது முடிவை மாற்றிக்கொண்டேன் என்று கூறினார்.

    சிபிஎம் ஆதரவாளரான ஜனார்தனன், மக்களுக்கு இலவசமாக தடுப்பூசிகளை வழங்குவதாக முதல்வர் பினராயி விஜயன் அறிவித்ததை கேட்டு நெகிழ்ந்துபோய் தனது வாழ்நாள் சேமிப்பை நன்கொடையாக வழங்கினார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஜனார்தனின் மனைவி கடந்த வருடம் இறந்துவிட, தற்போது அவர் தனிமரமாக வசித்து வருகிறார். எனினும், தனது மீதி வாழ்நாட்களை கழிக்க தொடர்ந்து அவர் உழைத்து வருகிறார். அந்த வருமானமே தனக்கு போதுமானது என்கிறார் அந்த ஹீரோ.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Esakki Raja
    First published: