முகப்பு /செய்தி /இந்தியா / ராகுல்காந்தி நடைபயணத்தில் பாதுகாப்பு குறைபாடா?.. காவல்துறை விளக்கம்..!

ராகுல்காந்தி நடைபயணத்தில் பாதுகாப்பு குறைபாடா?.. காவல்துறை விளக்கம்..!

ஜம்மு காஷ்மீரில் ராகுல் காந்தி யாத்திரை

ஜம்மு காஷ்மீரில் ராகுல் காந்தி யாத்திரை

ராகுல் நடை பயணத்தில் பாதுகாப்பு குளறுபடி என்ற புகாருக்கு ஜம்மு காஷ்மீர் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Jammu and Kashmir, India

இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில், ராகுல்காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் நாடு தழுவிய நடை பயணத்தை தொடங்கினார். முதல்கட்டமாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த நடைபயணம் நடைபெற்றது. பின்னர், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி ஆகிய மாநிலங்களை தொடர்ந்து யாத்திரை தற்போது ஜம்மு காஷ்மீரை அடைந்திருக்கிறது.

கன்னியாகுமரியில் தொடங்கிய தனது யாத்திரையை வரும் ஜனவரி 30ஆம் தேதி பல்வேறு தலைவர்களின் முன்னிலையில் ஜம்மு காஷ்மீரில் நிறைவு செய்ய ராகுல் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், நேற்று ஜம்மு காஷ்மீரின் பனிஹால் பகுதியில் ராகுல் காந்தி தனது யாத்திரையை தொடங்கினார். இதில் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஓமர் அப்துல்லாவும் பங்கேற்றார். யாத்திரை தொடங்கிய சில நிமிடங்களிலேயே அதை ரத்து செய்வதாக காங்கிரஸ் கட்சியினர் அறிவித்தனர். ராகுல் காந்தியின் பாதுகாப்பில் குறைபாடு இருந்ததே இதற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கேசி வேணுகோபால் கூறுகையில், யாத்திரையின் போது 15 நிமிடங்கள் எந்த ஒரு பாதுகாப்பு அதிகாரியும் இல்லாமல் பயணம் நடைபெற்றது. இது மிகப்பெரிய பாதுகாப்பு குளறுபடி. ராகுல் காந்தியும்,  சக தலைவர்கள், தொண்டர்களும் பாதுகாப்பு இல்லாமல் நடைப்பயணம் செய்ய முடியாது. எனவே, பயணம் ரத்து செய்யப்பட்டது என்றார். இந்நிலையில், ராகுல் பயணத்தில் பாதுகாப்பு குளறுபடி என்ற புகாருக்கு ஜம்மு காஷ்மீர் காவல்துறை பதில் விளக்கம் அளித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் காவல்துறை தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, "யாத்திரை தொடர்பாக அதன் ஒருங்கிணைப்பாளர்கள் ஜம்மு காஷ்மீர் காவல்துறையிடம் எந்த ஆலோசனையும் செய்யவில்லை. யாத்திரை தொடங்கிய பனிஹால் பகுதியில் இவ்வளவு பெரிய கூட்டம் கூடும் என்பதை ஒருங்கிணைப்பாளர்கள் எங்களிடம் தெரிவிக்கவில்லை. மத்திய ஆயுதப்படை, ஜம்மு காஷ்மீர் காவல்துறை இணைந்து யாத்திரைக்கு உரிய பாதுகாப்பை வழங்கி வருகிறது. எனவே, பாதுகாப்பு குறைபாடு என்ற புகார் தவறு" என விளக்கம் அளித்துள்ளது. இந்நிலையில், இன்று காலை தனது யாத்திரையை மீண்டும் தொடங்கும் ராகுல் காந்தி அவந்திபூரா, புல்வாமா, பாம்போர் ஆகிய பகுதிகளுக்கு செல்லவுள்ளார்.

First published:

Tags: Jammu and Kashmir, Omar Abdullah, Rahul gandhi