முகப்பு /செய்தி /இந்தியா / “குதிரை, யானை பந்தயத்தை அந்தந்த விலங்குகள் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்கின்றனவா?”- ஜல்லிக்கட்டு வழக்கில் பீட்டாவுக்கு நீதிபதி கேள்வி

“குதிரை, யானை பந்தயத்தை அந்தந்த விலங்குகள் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்கின்றனவா?”- ஜல்லிக்கட்டு வழக்கில் பீட்டாவுக்கு நீதிபதி கேள்வி

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

நீதிபதி ஜோசப், "மனிதர்களுக்கு சமமான உரிமைகள் விலங்குகளுக்கு இல்லை" என சுட்டிக்காட்டினார்.

  • Last Updated :
  • Delhi, India

ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு தடைவிதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையில் ஜல்லிக்கட்டு போட்டியின்போது காளைகள் துன்புறுத்தப்படுவதாக பீட்டா அமைப்பு காண்பித்த புகைப்படங்கள், குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கு போதுமானதாக இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு, கம்பாளா உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும், இதுதொடர்பாக கொண்டுவரப்பட்ட சிறப்பு சட்டங்களை ரத்து செய்யக் கோரியும் பீட்டா மற்றும் விலங்குகள் நல அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தன.

இந்த மனுக்கள் நீதிபதிகள் கே.எம்.ஜோசப், அஜய் ரஸ்தோகி உள்ளிட்ட 5 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் மீண்டும் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, பீட்டா உள்ளிட்ட மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா, விலங்குகளுக்கு தீங்கிழைக்க கூடாது என்பதுதான் விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் நோக்கம் என்றும், விலங்குகளுக்கும் உரிமைகள் உண்டு என்றும் வாதிட்டார்.

“புதுசா ஒரு மோசடி.. லிங்க க்ளிக் பண்ணா மொத்த பணமும் போய்டும்..” எச்சரிக்கும் தமிழ்நாடு டிஜிபி.! 

அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஜோசப், "மனிதர்களுக்கு சமமான உரிமைகள் விலங்குகளுக்கு இல்லை" என சுட்டிக்காட்டினார். ஒரு கொசு கடிக்கும்போது அதை கொன்று விட்டால், விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமா அல்லது கொசுவிடம் இருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமா என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த வழக்கறிஞர் லூத்ரா, பாம்புகளுக்கும் விலங்குகள் வதை தடுப்பு சட்டம் பொருந்தும் என்றும், பாம்பைக் கண்டால் தூர விலகிச் செல்ல வேண்டுமே தவிர அருகில் செல்லக் கூடாது என்றும் குறிப்பிட்டார். ஆனால், ஒரு பாம்பு கடிக்க வந்தால் என்ன செய்வது என்று கூறிய நீதிபதி, பிரச்னையை திசை திருப்பாதீர்கள் என்று கூறினார்.

இதையடுத்து, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போட்டிகளின் போது, மாடுகள் மீது கூர்மையான ஆயுதங்களால் துன்புறுத்தப்படுவதாக குற்றம்சாட்டி, அது தொடர்பான புகைப்படங்களை நீதிபதிகளிடம் பீட்டா அமைப்பின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் காண்பித்தனர்.

ஆனால், பீட்டா தரப்பில் காண்பிக்கப்பட்ட புகைப்படங்கள் எதார்த்தத்திற்கு முற்றிலும் முரணாக உள்ளது என்றும், குற்றம் சுமத்த வேண்டும் என்ற நோக்கிலேயே இதுபோன்ற புகைப்படங்களை பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் எடுத்து வெளியிடுவதாகவும், தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி வாதிட்டார்.

மேலும், 1.17 லட்சத்துக்கும் அதிகமான மாடுகள் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை நீதிமன்றம் பார்த்தால், உண்மை தெரியும் எனவும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, கூர்மையான கருவி, காளைகளுக்கு கட்டப்பட்டுள்ள கயிறை அறுப்பதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதாகவும், அவற்றை துன்புறுத்த அல்ல என்றும் மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஜல்லிக்கட்டு, கம்பாளா போன்ற விளையாட்டுகளுக்கு சிறப்பு சட்டம் இயற்ற மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்றும், ஆனால், சட்டம் இயற்றும் அதிகாரத்தை முறையாக பயன்படுத்துவதில் உள்ள பிரச்னையில் தான் அக்கறை செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

சபரிமலை மண்டல காலத்தில் தினசரி நடைபெறும் பூஜைகள்... முழுவிவரம் இதோ! 

விலங்குகள் மீதான வதையைத் தடுக்க வேண்டும் என்றால், நாடாளுமன்றத்தில் மேலும் சட்டத் திருத்தம் கொண்டு வரலாமே தவிர, மிருக வதை தடுப்பு சட்டம் என்ற தலைப்பு இருந்தால், மிருகங்களை கொடுமைப்படுத்த கூடாது என்று முழுமையாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், வணிக நோக்கில் ஜல்லிக்கட்டு, கம்பாளா போன்ற விளையாட்டுகள் நடைபெறுவதாக கூறுவதை ஏற்க முடியாது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த நிகழ்ச்சிகள் நடக்கும்போது கிராமப்புறங்களில் டிக்கெட் விற்கப்படுகிறதா என கேள்வி எழுப்பினர்.

குதிரை, யானை பந்தயம், போலோ விளையாட்டுகள் நடத்துவதை அந்தந்த விலங்குகள் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்கின்றனவா எனவும், எதன் அடிப்படையில் இந்த பந்தயங்கள் நடத்தப் படுகின்றன எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அத்துடன், குத்துச்சண்டையில் போட்டியாளர்கள் சிலர் உயிழந்து கூட விடுகின்றனர் என்பதையும் சுட்டிக்காட்டினர்.

எனவே, காளைகள் துன்புறுத்தப்படுவதாக பீட்டா அளித்துள்ள சில புகைப்படங்கள் ஒட்டுமொத்த விதிமுறைகளும் மீறப்படுகின்றன என்பதை நிரூபிப்பதற்கு போதுமானதாக இல்லை என்று தெரிவித்தனர்.

top videos

    எனவே, புகைப்படங்களை பிரமாணப்பத்திரமாக உரிய முறையில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்ட அரசியல் சாசன அமர்வு, வழக்கு விசாரணையை வரும் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

    First published:

    Tags: Jallikattu, Supreme court