அனுமன் ஜெயந்தியன்று வன்முறை ஏற்பட்ட டெல்லி ஜகாங்கிர்புரி பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கிய நிலையில், உச்சநீதிமன்றம் தலையிட்டதால், அந்த பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
டெல்லி ஜகாங்கிர்புரி பகுதியில் அனுமன் ஜெயந்தியையொட்டி கடந்த சனிக்கிழமை பேரணி நடைபெற்ற போது இருதரப்பினர் இடையே வன்முறை வெடித்தது. இதையடுத்து மாநில பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா, ஜகாங்கிர்புரி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கடிதம் எழுதினார்.
இந்நிலையில் சிறப்பு காவல் ஆணையர் தீபேந்திர பதாக் மற்றும் 400 போலீசாரின் பாதுகாப்புடன், மாநகராட்சி அதிகாரிகள் ஜகாங்கிர்புரி பகுதிக்கு சென்றனர். கல்வீச்சு சம்பவம் நடந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு இடங்களாக கருதப்படும் வீடுகள், சட்டவிரோத கட்டடங்கள், கடைகளை ஜேசிபி இயந்திரம் கொண்டு இடித்தனர்.
இதையும் படிங்க - 2024 தேர்தலில் 400 தொகுதிகளில் வெற்றிபெற காங்கிரஸ் இலக்கு... வியூகம் வகுக்கும் பிரசாந்த் கிஷோர்
இந்நிலையில், எவ்வித முன்னறிவிப்பின்றி மாநகராட்சி அதிகாரிகள் கட்டடங்களை இடித்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். கடந்த 15 ஆண்டுகளாக ஜகாங்கீர்புரியில் தாம் கடை நடத்தி வருவதாகவும், இதற்கு முன் தமது கடையை ஆக்கிரமிப்பு இடமாக எந்த அதிகாரியும் கூறியதில்லை என்றும் பெண் வியாபாரி வேதனையுடன் தெரிவித்தார்.
இதற்கிடையே, ஜகாங்கிர்புரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா முன்பு, வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷண், கபில் சிபல் ஆகியோர் முறையிட்டனர். ஆக்கிரமிப்புகள் அகற்றம் முற்றிலும் முறைகேடாது என தெரிவித்தனர்.
இதுதொடர்பாக நாளை விசாரிக்கப்படும் என்றும், அதுவரை தற்போதைய நிலையே தொடர வேண்டும் எனவும் தலைமை நீதிபதி உத்தரவிட்டதால், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.