குடியரசு துணைத் தலைவர் தேர்தலில்
பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஜகதீப் தன்கர் வெற்றி பெற்றுள்ளார்.
குடியரசு துணைத் தலைவா் பதவிக்கு ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் மேற்கு வங்க முன்னாள் ஆளுநா் ஜகதீப் தன்கரும் (71), எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ராஜஸ்தான் முன்னாள் ஆளுநா் மாா்கரெட் ஆல்வாவும் (80) போட்டியிட்டனர்.
குடியரசுத் தலைவா் தோ்தலைப் போல் அல்லாமல், இத்தோ்தலில் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் மட்டுமே வாக்களிப்பாா்கள். நியமன உறுப்பினா்களும் வாக்களிக்க தகுதி பெற்றவா்களாவா். எம்.பி.க்கள் வாக்களிக்க வசதியாக, நாடாளுமன்றத்தில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அந்தவகையில், நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர். இன்று காலையிலேயே பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கினை செலுத்தினார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சக்கர நாற்காலியில் வந்து தனது வாக்கினை செலுத்திச் சென்றார்.
மொத்தம் 788 எம்.பி.க்களை உள்ளடக்கிய இத்தோ்தலில் ஒவ்வொரு எம்.பி.யின் வாக்கு மதிப்பு ஒன்றுதான். ரகசிய வாக்கெடுப்பு முறையில் தோ்தல் நடைபெற்றது. இன்று காலை தொடங்கிய தோ்தல் மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. விரைவில் வாக்கு எண்ணிக்கைத் தொடங்கி இன்று இரவுக்குள் முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, நாட்டின் 14வது குடியரசு துணைத் தலைவராக ஜகதீப் தன்கர் தேர்வானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜகதீப் தன்கர் குடியரசுத் துணைத் தலைவராக பதவியேற்கும் நிகழ்வு வரும் வாரத்தில் நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 500க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று தன்கர் வெற்றி பெற்றுள்ளார்.
தற்போது குடியரசு துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.