தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸை காணவில்லை: மேற்குவங்க கூட்டணி கட்சி தலைவர் வருத்தம்

தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸை காணவில்லை: மேற்குவங்க கூட்டணி கட்சி தலைவர் வருத்தம்

ISF-ன் தலைவர் அப்பாஸ் சித்திகி

மேற்குவங்கத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் தனக்காக பிரச்சாரம் செய்யவில்லை என்று அதன் கூட்டணி கட்சியான ISF-ன் தலைவர் அப்பாஸ் சித்திகி தெரிவித்துள்ளார்.

  • Share this:
மேற்குவங்கத்தில் சட்டமன்ற தேர்தல் மம்தா பானர்ஜி Vs பாஜக என இருந்தாலும் கூட இவ்விரண்டுக்கும் மாற்றாக காங்கிரஸ், இடதுசாரிகள், இந்திய மதச்சார்பற்ற முன்னணி (ISF) ஆகிய கட்சிகள் இணைந்து ‘சம்ஜுக்தா மோர்சா’ என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளன.

இருப்பினும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் குறித்து இந்திய மதச்சார்பற்ற முன்னணி (ISF)கட்சியின் தலைவர் அப்பாஸ் சித்திகி வருத்தத்துடன் தெரிவித்துள்ள கருத்துக்கள் காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நியூஸ்18 தொலைக்காட்சிக்கு அப்பாஸ் சித்திகி அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், “எங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர்கள் ஏன் பிரச்சாரம் செய்ய முன்வரவில்லை என தெரியவில்லை. அவர்கள் தான் இதற்கான காரணத்தை சொல்ல வேண்டும். ஆனால் தெற்கு வங்கத்தில் என்னுடைய ஆதரவை பல காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு தந்து ஆதரவளித்துள்ளேன். மேற்குவங்க தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் இல்லாதது வருத்தமும் துரதிர்ஷ்டவசமுமானது” என்றார்.

மேலும் மேற்குவங்கத்தில் பாஜகவில் வளர்ச்சிக்கு காரணமே திரிணாமுல் காங்கிரஸ் தான் எனவும் அப்பாஸ் சித்திகி குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து அப்பாஸ் சித்திகி பேசுகையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் மேற்குவங்கத்தில் பாஜகவின் வளர்சிக்கு உதவுவதாக உள்ளது. 2011ம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததில் இருந்து கடந்த 10 ஆண்டுகளாக மாநிலத்தின் இஸ்லாமியர்களை ஏமாற்றி வருகிறார். மம்தாவுக்கு இஸ்லாமியர்களின் வாக்குகள் இந்த முறை கிடைக்காது என்பதை தெரிந்துகொண்டு, தான் மீண்டும் ஆட்சிக்கு வரமாட்டேன் என்பதை உணர்ந்து என்னை அவதூறாக பேசிவருகிறார். அவரின் முயற்சிகள் இந்த முறை பலனளிக்காது” என்றார்.

திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு மாற்றாக உருவாக்கப்பட்டுள்ள சம்ஜுக்தா மோர்சா கூட்டணி சார்பில் முதல் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் கொல்கத்தாவின் பிரிகேட் மைதானத்தில் நடைபெற்ற போது காங்கிரஸ் மற்றும் ISF கட்சிகளுக்கு இடையேயான மனக்கசப்பு அப்பட்டமாக தெரிந்தது. சித்திகி மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடுகள் வெளிப்பட்டன.

இதுவரை காங்கிரஸ் தலைமை மேற்குவங்கத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை. ஆனால் அதே நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் அசாமில் பத்ருதின் அஜ்மல் மற்றும் மேற்குவங்கத்தில் அப்பாஸ் சித்திகி ஆகியோருடன் கூட்டணி வைத்ததற்காக தேர்தல் பரப்புரையின் போது காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
Published by:Arun
First published: