Home /News /national /

என்ன உணவு சாப்பிடலாம், சாப்பிட கூடாது என்பதை அரசு உத்தரவிட முடியாது - அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி பேட்டி

என்ன உணவு சாப்பிடலாம், சாப்பிட கூடாது என்பதை அரசு உத்தரவிட முடியாது - அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி பேட்டி

அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி பேட்டி

அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி பேட்டி

மார்கெட்டுகளில் மற்ற பொது இடங்களில் ஹிஜாப் அணியலாம். ஆனால், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உரிய சீருடை, கட்டுப்பாடுகள் உள்ளன. அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

    மக்கள் என்ன உணவு சாப்பிட வேண்டும், சாப்பிட வேண்டாம் என்பதை அரசு உத்தரவிட முடியாது என மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கருத்து தெரிவித்துள்ளார்.

    நாட்டில் நிலவும் மத ரீதியான மோதல்கள் குறித்து மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி விரிவான கருத்தை தெரிவித்துள்ளார். தி என்காமிக்ஸ் டைம்ஸ் நாளேட்டிற்கு அளித்த பேட்டியில் இதை பேசியுள்ளார்.
    நக்வி தனது பேட்டியில் கூறியதாவது, இந்தியாவில் அனைத்து மதத்தினரும் தங்கள் நம்பிக்கைகளை கடைப்பிடிக்க சுதந்திரம் உள்ளது. மக்களிடையே மத ரீதியாக சகிப்புத் தன்மை குறைவதாக கூற முடியாது. சில பிளவு சக்திகள் நாட்டின் அமைதியையும் வளர்ச்சியையும் ஜீரணிக்க முடியாமல் நாட்டின் ஒருங்கிணைந்த கலாசாரத்தை அவமதிக்க முயற்சிக்கின்றனர் என்றார்.

    டெல்லி ஜெஎன்யு பல்கலைக்கழகத்தில் அசைவம் உண்பது தொடர்பாக இரு தரப்புக்கு வெடித்த மோதலில் பல மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இது குறித்து கருத்து தெரிவித்த நக்வி, மக்கள் என்ன சாப்பிட வேண்டும். என்ன சாப்பிடக் கூடாது என்பது கூறுவது அரசின் வேலையில்லை. நாட்டின் அனைத்து குடிமக்களும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப உணவை அவர்கள் தேர்வு செய்துகொள்ளலாம் என்றார்.

    கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களுக்குள் ஹிஜாப் அணிவது தொடர்பாக எழுந்த சர்ச்சை குறித்து நக்வி கூறுகையில், இந்தியாவில் ஹிஜாப் அணியக் கூடாது என தடை விதிக்கப்படவில்லை. மார்கெட்டுகளில் மற்ற பொது இடங்களில் ஹிஜாப் அணியலாம். ஆனால், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உரிய சீருடை, கட்டுப்பாடுகள் உள்ளன. அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

    இதையும் படிங்க - பேட் டச்! சிறுமி மார்பகத்தை தொட்டாலும் குற்றமே... போக்சோ வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு

    முன்னதாக காங்கிரஸ் உள்ளிட்ட நாட்டின் முன்னணி எதிர்க்கட்சிகள் பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி வந்தபின் சகிப்புத் தன்மை குறைந்து வருகிறது என பகிரங்க அறிக்கை வெளியிட்டன. இதற்கு பதிலளிக்கும் விதமாகவே அமைச்சர் நக்வி இந்த பேட்டியில் பேசியுள்ளார்.

    கர்நாடகா மாநிலத்தில் ஹிஜாப் அணிவது, ஹலால் உணவு விடுதிகள் நடத்துவது, மசூதிகளில் ஒலி பெருக்கி பயன்படுத்துவது போன்ற விவகாரங்களில் சர்ச்சை கிளம்பியது. கடந்த இரு நாள்களாக டெல்லி, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் அனுமன் ஜெயந்தி விழா ஊர்வலத்தில் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது.

    இந்தியாவில் நடைபெற்று வரும் இதுபோன்ற தாக்குதல்களை அமெரிக்கா கவனித்து வருவதாகவும், இது கவலை தரும் அம்சம் எனவும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிலிங்கன் கடந்த வாரம் கருத்து தெரித்திருந்தார்.

    - கண்ணன் வரதராஜன்
    Published by:Esakki Raja
    First published:

    Tags: BJP, Hijab, Non Vegetarian

    அடுத்த செய்தி