2020 இறுதிக்குள் சந்திராயன் 3 விண்கலனை ஏவ திட்டம்... புதிய மாற்றங்கள் இதுதான்...!

2020 இறுதிக்குள் சந்திராயன் 3 விண்கலனை ஏவ திட்டம்... புதிய மாற்றங்கள் இதுதான்...!
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: November 15, 2019, 9:40 AM IST
  • Share this:
சந்திரயான்-2 விண்கலனை நிலவின் தென் துருவத்தில் மெதுவாக தரையிறக்கும் முயற்சி தோல்வியடைந்த நிலையில், நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலனை அடுத்தாண்டு இறுதிக்குள் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

இஸ்ரோ சார்பில் நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திரயான் -2 விண்கலம் கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. புவி வட்டப்பாதையில் இருந்து படிப்படியாக நிலை உயர்த்தப்பட்ட விண்கலனை நிலவின் தென் துருவத்தில் செப்டம்பர் 7-ம் தேதி அதிகாலை மெதுவாக தரையிறக்க திட்டமிடப்பட்டது.

இதன்படி, 7-ம் தேதியன்று ஆர்பிட்டரில் இருந்து பிரிந்த லேண்டர் விக்ரம் நிலவுக்கு மிக அருகில் சென்றிருந்தபோது தொழில்நுட்ப கோளாறால் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டது.லேண்டர் விக்ரமின் ஆயுட் காலம் 14 நாட்கள் மட்டுமே என்ற நிலையில், அதனுடன் தொடர்பை ஏற்படுத்த விஞ்ஞானிகள் பலகட்ட முயற்சிகளை மேற்கொண்டும் பலனளிக்காமல் போனது.


அதேசமயம், ஆர்பிட்டர் தொடர்ந்து நிலவை சுற்றி வந்து சிறப்பான முறையில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆர்பிட்டரில் இடம்பெற்றுள்ள நவீன கேமராக்கள், எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டா் உள்ளிட்ட 8 பேலோடுகளும் நிலவு குறித்த பல்வேறு தகவல்களை பூமிக்கு அனுப்பி வருகிறது. டெரைன் கேமரா எடுத்த நிலவின் நிலப்பரப்பின் முப்பரிமாண புகைப்படத்தை இஸ்ரோ நேற்று வெளியிட்டது. நிலவின் பரப்பில் பெரும் பள்ளங்கள், சிறு பள்ளங்கள், முகடுகள் என அனைத்தையும் மிகத் தெளிவாக முப்பரிமாண வடிவில் படம் எடுத்து அனுப்பியிருக்கிறது.

இந்நிலையில், நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 3 விண்கலனை ஏவ இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். லேண்டர் விக்ரமை மெதுவாக நிலவில் தரையிறக்க முடியாமல் போனதற்கான காரணங்கள் மற்றும் புதிதாக லேண்டரை நிலவில் தரையிறக்குவது குறித்தும் விஞ்ஞானிகள் ஆலோசனை நடத்தி வந்தனர். இதன்படி, நேற்று முன் தினம் நடைபெற்ற கூட்டத்தில் சந்திரயான் -3 விண்கலனின் கட்டமைப்பு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அடுத்தாண்டு நவம்பர் மாதத்திற்குள் சந்திரயான் -3 விண்கலனை நிலவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்திரயான்-2 விண்கலனின் ஆர்பிட்டர் நன்றாக வேலை செய்து வருவதால், சந்திரயான் 3-ல் லேண்டர் மற்றும் ரோவர் வாகனங்கள் மட்டுமே இடம்பெறச் செய்ய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக, லேண்டர் விக்ரமை போன்று இல்லாமல் எவ்வளவு வேகத்தில் சென்றாலும் தரையிறங்கும் வகையில் வலுவான கால்களுடன் கூடிய லேண்டர் வடிவமைக்கப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், சந்திரயான் 2-ஐ போன்று இல்லாமல் சந்திரயான் -3 இன் நிலையை உயர்த்துவதை 3 அல்லது 4 முறையாக குறைக்கவும் விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

Loading...


 
First published: November 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...