Yediyurappa : ஆளுநராகிறாரா எடியூரப்பா..? கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் யார்?

எடியூரப்பா

தெலங்கானா அல்லது மகாராஷ்டிரா மாநில ஆளுநராக எடியூரப்பா நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 • Share this:
  கர்நாடகா மாநிலத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்விக்கு இதுவரையில் விடை கிடைக்காத நிலையில், அடுத்த முதலமைச்சர் தேர்வு செய்யப்படும் வரையில் காபந்து முதலமைச்சராக எடியூரப்பா நீடிக்க உள்ளார். எடியூரப்பாவுக்கு ஆளுநர் பதவி வழங்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

  கர்நாடகா மாநில முதலமைச்சராக நான்காவது முறையாக எடியூரப்பா பதவியேற்கும் போதே அவருக்கு வயது 75. எழுபத்து ஐந்து வயதுக்கு மேல் கட்சி சார்ந்த பணிகளிலும் ஆலோசனைகளையும் மட்டுமே வழங்க வேண்டும் என்ற கொள்கை கொண்டுள்ள பாஜக, தற்போது எடியூரப்பாவை ராஜினாமா செய்ய வைத்திருக்கிறது.

  எடியூரப்பா பதவி விலக வயது மட்டும் காரணமல்ல. அவருக்கு எதிராக சுற்றுலாத் துறை அமைச்சர் சி.பி.யோகேஷ்வர், எம்.எல்.ஏ.க்கள் பசனகவுடா எத்னால், அரவிந்த் பெல்லத் உள்ளிட்டோர் வெளிப்படையாக குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்தனர். கொரோனா பெருந்தொற்றை எடியூரப்பா சரியாக கையாவில்லை என்றும், ஜிண்டால் நிறுவனத்திற்கு 3 ஆயித்து 677 ஏக்கர் அரசு நிலத்தை வழங்க முடிவு செய்தார் என்றும், நிர்வாகத்தில் எடியூரப்பாவின் மகன் விஜேந்திராவின் தலையீடு என்றும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இதன் காரணமாக அதிகரித்த நெருக்கடியாலேயே எடியூரப்பா பதவி விலகியதாக கூறப்படுகிறது.

  எடியூரப்பாவுக்கு மாற்றாக ஒருவரை கட்சி மேலிடம் இதுவரை அறிவிக்கவில்லை. இரண்டு ஆண்டுகளில் தேர்தலை சந்திக்க உள்ள அம்மாநிலத்தை வழிநடத்த அனைவரும் ஏற்றுக்கொள்ளும் ஒருவரை தேர்வு செய்ய இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில், சுரங்கம் மற்றும் புவியியல் துறை அமைச்சர்கள் முருகேஷ் நிரானி, பசவராஜ் பொம்மை ஹூப்ளி - ராவாட் எம்.எல்.ஏ. அரவிந்த் பெல்லத், மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, தேசிய பொதுச் செயலாளர் சி.டி. ரவி ஆகியோரில் ஒருவர் தேர்வு செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

  தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவரை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கடந்த சில நாட்களாக மேலோங்கி நிற்கிறது. துணை முதலமைச்சர் கோவிந்த் கர்ஜோல் மற்றும் பி. ஸ்ரீராமுலு அகியோரின் பெயர்களும் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது.

  கர்நாடகாவில் 17 சதவிகிதம் உள்ள லிங்காயத் சமூகத்தினர் தற்போது எடியூரப்பாவிற்கு ஆதரவாக அணி திரள்கின்றனர். எனினும் லிங்காயத் சமூகத்தை தளமாகக் கொண்ட கட்சியாக இருக்க பாஜக விரும்பவில்லை. அதற்கு மாறாக ஒரு இந்துத்துவ கட்சியாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள அக்கட்சி விரும்புகிறது, அதன் வெளிப்பாடாகவே லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த எடியூரப்பாவிடம், அவராகவே முதல்வர் பதவியில் இருந்து விலகுவதற்கான அழுத்தத்தை பாஜக மேலிடம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

  Must Read : ஆகஸ்ட் 1 முதல் மாத சம்பளம், ஓய்வூதியம், இஎம்ஐ கட்டணத்திற்கு புதிய விதி - மாற்றம் செய்த ஆர்பிஐ

  எடியூரப்பாவை முற்றிலுமாக புறந்தள்ளவும் கட்சி மேலிடம் விரும்பவில்லை. அவரது தலைமையில் அணி திரளும் லிங்காயத் சமூக மக்கள் 40 முதல் 50 சதவிதிக சட்டமன்ற தொகுதிகளின் வெற்றியை தீர்மானிப்பவர்கள். அவர்களை திருப்திப்படுத்த எடியூரப்பாவுக்கு கௌரவமான ஆளுநர் பதவி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

  தெலங்கானா அல்லது மகாராஷ்டிரா மாநில ஆளுநராக எடியூரப்பா நியமிக்கப்படலாம் எனவும் அவரது மகன் விஜயேந்திராவுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. தெலங்கானா ஆளுநராக உள்ள தமிழிசை சவுந்தரராஜனை, புதுச்சேரியின் நிரந்திர துணை நிலை ஆளுநராக நியமிக்க திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
  Published by:Suresh V
  First published: