முகப்பு /செய்தி /இந்தியா / தாஜ்மகால் சிவாலயமா... 22 அறைகளின் ரகசியம் என்ன?

தாஜ்மகால் சிவாலயமா... 22 அறைகளின் ரகசியம் என்ன?

தாஜ் மஹால்

தாஜ் மஹால்

Taj Mahal: தாஜ் மகால் தொடர்பான முகலாய அரசு ஆவணக்குறிப்புகளின் தொகுப்பில், தாஜ் மகாலின் நிலம், ராஜா ஜெய் சிங்கிற்கு சொந்தமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  அந்த நிலத்தை பெறும் போது அதற்கு தாராளமான இழப்பீடு  வழங்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :

உலக அதிசயம், காதல் சின்னம் என்று  அறியப்படும் தாஜ் மகால், ஒரு காலத்தில் சிவாலயமாக இருந்ததாக கூறி பாஜக உறுப்பினர் நீதிமன்றம் சென்றார். அதேவேளையில் தாஜ் மகாலின் இடம் தங்களுக்கு சொந்தமானது என்று ஜெய்ப்பூர் அரச குடும்பத்தின் வாரிசான தியா குமாரி சொந்தம் கொண்டாடி வருகிறார். ஷாஜகானின் காதல் மாளிகையில் உள்ள 22 அறைகளில் புதைந்திருக்கும் ரகசியம் என்ன என்பதை பார்ப்போம்.

முகலாய பேரரசரான  ஷாஜகான், தனது காதல் மனைவி மும்தாஜின் பிரிவை அடுத்து, அவருக்காக எழுப்பிய பிரமாண்ட நினைவிடம் தான் தாஜ் மகால். 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த நினைவுச்சின்னம், ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது.

இதனை கட்டுவதற்காக ஷாஜகான் அப்போது சுமார் மூன்று கோடி ரூபாய்க்கும் மேல் செலவிட்டதாக கூறப்படுகிறது. அதன் இன்றைய மதிப்பு 7 ஆயிரத்து 600 கோடி ரூபாய் ஆகும்.  இந்தியத் தலைவர்கள் முதல் உலகத் தலைவர்கள் வரை கால்பதித்த அழகோவியம் தான் இந்த தாஜ் மகால். அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இஸ்ரேல் முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நேதன்யஹு உள்ளிட்ட தலைவர்கள் அண்மைக் காலங்களில் தாஜ் மகாலை குடும்பத்துடன் வந்து சுற்றிப்பார்த்தவர்கள் ஆவர்.

இத்தகைய பிரமாண்டமும், அழகும் ஒருசேர இணைந்துள்ள தாஜ் மகாலைச் சுற்றி அண்மைக்காலமாக  அரசியல் சர்ச்சைகள் சூழ்ந்து வருகின்றன. 2017-ல் உத்தர பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்ற பின்னர், அந்த மாநிலத்தின் சுற்றுலாத் தலத்திலிருந்து தாஜ் மகால் நீக்கப்பட்டது. தாஜ் மகால் இந்தியக் கட்டடக் கலை வகையில்லை என்று இதற்கு உத்தர பிரதேச அரசு விளக்கமும் அளித்தது.

இதையும் படிங்க: புத்த பூர்ணிமா அன்று புத்தர் பிறந்த நேபாளத்திற்கு சென்ற பிரதமர் மோடி

இதனைதொடர்ந்து தாஜ் மகால் வளாகத்தில் சிவன் சிலை இருப்பதாகக் கூறி பூஜை செய்வதாக சாமியார்கள் உள்ளே நுழைய முற்பட்டதும் பேசுபொருளானது. பின்னர், இந்துத்துவா அமைப்பினரின் இதே கருத்தை பா.ஜ.க எம்.பி. வினய் கட்டியார் தெரிவித்தது பெரும் சர்ச்சையானது.

இந்தநிலையில் தான், தாஜ் மகாலில் உள்ள 22 அறைகள் பூட்டியே இருப்பதாகவும், அவற்றில் உள்ள இந்து கடவுள்களின் சிலைகளை மீட்க வேண்டும் என்று கோரி, பா.ஜ.க நிர்வாகி ரஜ்னீஷ் சிங் என்பவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவானது தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், 22 அறைகளில் உள்ள ரகசியங்களை இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க: சொத்து தொடர்பாக முன்விரோதம்.. பெண் வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்திய நபர் (வீடியோ)

தாஜ் மகாலின் அடித்தளத்தில் இருப்பதாக கூறப்படும் 22 அறைகள், உண்மையில் அறைகள் கிடையாது என்றும்,  அவை, கதவுகள் பொருத்தப்பட்ட ஒரு  நீண்ட வளைவு நடைபாதை மட்டுமே ஆகும் என ஏ.எஸ்.ஐ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  வாரம் ஒருமுறை அந்த அறைகள் அனைத்தும் சுத்தம் செய்யப்படுவதாகவும், அங்கிருக்கும் சுவர்களில் எதுவும் இல்லை என்றும், அறைகளில் எந்த ரகசியமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

நாள்தோறும் ஒரு லட்சம் பேர் பார்வையிடும் உலக புராதனச் சின்னத்தில், தேவையற்ற மக்கள் நடமாட்டத்தை தடுக்கவே அறைகள் பூட்டி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். அதேபோல பிரதான கல்லறை மற்றும் மினாரட்டுகள் நிற்கும் பீடத்தை தாங்கி பிடிப்பதற்காகவே அடித்தளத்தில் சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

தாஜ் மகாலின் கட்டட உறுதித்தன்மையை சோதிக்க அவ்வப்போது இந்த அடித்தள அறைகளில் ஆய்வு நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.  முகலாய கட்டடக்கலையில் இத்தகைய நிலத்தடி அறைகள் புகழ்வாய்ந்தவை ஆகும். இந்தசூழலில்,  தாஜ் மகால் உண்மையில் சிவாலயம் இருந்தது என தொடர்ந்து கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

இதை படிக்க: வரதட்சனைக்காக மனைவியை வீட்டில் சுவர் எழுப்பி சிறை வைத்த பிரபல தொழிலதிபர்..

1761-ம் ஆண்டில் இந்து மன்னர் சூரஜ் மால் ஆக்ராவை கைப்பற்றியபின், அரசவை மதகுரு தாஜ் மகாலை கோயிலாக மாற்றிவிடுமாறு பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது.  அதேபோல 1964ம் ஆண்டு, எழுத்தாளர் பி.என். ஓக், தாஜ் மகால் உண்மையில் சிவாலயமாக இருந்ததாக, புத்தகம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேசிய பாஜக எம்.பி. தியா குமாரி, தாஜ் மகால் இருக்கும் அந்த நிலம் தங்களது ஜெய்ப்பூர் அரச குடும்பத்துக்குச் சொந்தமானது என்றும், அதை ஷாஜகான் கையகப்படுத்திக் கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.  இதுதொடர்பாக சட்டப்பூர்வ  நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

எனினும் தாஜ் மகால் தொடர்பான முகலாய அரசு ஆவணக்குறிப்புகளின் தொகுப்பில், தாஜ் மகாலின் நிலம், ராஜா ஜெய் சிங்கிற்கு சொந்தமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  அந்த நிலத்தை பெறும் போது அதற்கு தாராளமான இழப்பீடு  வழங்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக வலதுசாரியினர் முன்னெடுக்கும் சிவாலயம் கருத்துகளால், தாஜ் மகாலைச் சுற்றி அரசியல் சர்ச்சைகள் எழுந்து வருவதாக இடதுசாரி தரப்பினர் தெரிவித்துள்ளனர். வெள்ளை பளிங்கு கற்களை கொண்டே படைக்கப்பட்ட தாஜ் மகால், அரசியலையும் தாண்டி கட்டடக் கலையின் ஆச்சரியக்குறியாகவே விளங்கி வருகிறது.

செய்தியாளர்: சேஷா டேனியல் 

First published:

Tags: Hindu Temple, Mumtaj, Taj Mahal