மகாராஷ்டிராவில் 2வது அலை கொரோனா பரவியதற்கு காரணம் என்ன? விரிவான அலசல்!

கொரோனா வைரஸ்

கொரோனா பாதித்தவர்களை அடையாளம் காண்பதிலும், கொரோனா பாதிப்பு பகுதிகளை கட்டுப்படுத்துவதிலும் மெத்தனமாக செயல்பட்டதால் இத்தகைய மோசமான நிலையை மகாராஷ்டிரா எட்டியிருப்பதாகவும் மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.

  • Share this:
கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவியதால் முதல் கட்ட லாக்டவுன் தீவிரமாக அமல்படுத்தப்பட்டது. பின்னர், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்ததால் படிப்படியாக ஊரடங்கு விலக்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது இரண்டாவது அலை கொரோனா வைரஸ் பரவல் மிக மோசமான நிலையில் நாடு முழுவதும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது.

மத்திய அரசு, மகாராஷ்டிரா தலைமைச் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறைந்த நேரத்தில் மிக வேகமாக செயல்பட்டு கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துமாறு கோரியுள்ளது. மேலும், ஐ.சி.எம்.ஆர் வழிக்காட்டுதல்படி கொரோனா பரிசோதனையை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பாதித்தவர்களை அடையாளம் காண்பதிலும், கொரோனா பாதிப்பு பகுதிகளை கட்டுப்படுத்துவதிலும் மெத்தனமாக செயல்பட்டதால் இத்தகைய மோசமான நிலையை மகாராஷ்டிரா எட்டியிருப்பதாகவும் மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. மேலும், கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்த 20 முதல் 30 பேரை அடையாளம் கண்டு, அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்குமாறும் மத்திய அரசு, மகாராஷ்டிரா அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவின் மோசமான நிலைக்கு காரணம் என்ன?

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதிலிருந்து மகாராஷ்டிராவில் மிக அதிகமான பாதிப்பு இருந்து வருகிறது. குறிப்பாக, வுகான் நகரில் கொரோனா தாண்டவம் உச்சத்தில் இருந்த சமயத்தில் மும்பையிலும் கொரோனா வேகமாக பரவத் தொடங்கியது. மும்பை ஏர்போர்ட்டில் இருந்து பெரும்பாலானோர் வெளிநாடுகளுக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்தது இதற்கு முக்கிய காரணமாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து லாக்டௌனில் தளர்வுகள் ஏற்பட்டதால் மக்கள் இயல்பாக நடமாடத் தொடங்கினர். இதனால், நெரிசல் மிக்க மும்பை நகரில் தீவிரமாக கொரோனா பரவியுள்ளது.

கொரோனா பரிசோதனை மிக மெதுவாக இருப்பதும் இந்த பரவலுக்கு காரணம் என தெரிவித்துள்ள நிபுணர்கள், குறிப்பாக பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட்டதிலிருந்து கொரோனா பாதிப்பு வேகமும் அதிகரித்ததாக கூறியுள்ளனர். நாளுக்குள் நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், மும்பை மட்டுமல்லாது மாநிலத்தில் ஒவ்வொரு நகரமும் கொரோனா பாதிப்பில் ஒன்றையொன்று விஞ்சிக் கொண்டிருக்கின்றன. நாளொன்றுக்கு சராசரியாக 18 ஆயிரம் பேர் வரை புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்படுகின்றனர். அரசியல் கட்சியினர் கூட்டங்களும், மத வழிபாடு தலங்களும் கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணமாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

டெஸ்ட், டிராக், தனிமைப்படுத்துதல்

பரிசோதனை மற்றும் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தும் முயற்சி மகாராஷ்டிராவில் போதுமான வேகத்தில் இல்லை என மத்திய அரசு கூறியுள்ளது. பாதிக்கப்பட்ட ஒருவருடன் தொடர்பில் இருந்த குறைந்தபட்சம் 20 பேரையாவது அடையாளம் காணும் முயற்சியை, மகராஷ்டிரா களப்பணியாளர்கள் முறையாக செய்யவில்லை என்று கூறியுள்ள மத்திய அரசு, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை மட்டுமே அவர்கள் குறிவைப்பதாக தெரிவித்துள்ளது. கொரோனா பாதித்த நபர் வேலைக்கு சென்ற இடம், கடை உள்ளிட்ட சமூகபகுதிகளில் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காண குறைந்தபட்ச முயற்சிகள்கூட எடுக்கப்படவில்லை என மத்திய அரசின் அறிக்கை கூறுகிறது.

அம்மாநில தலைமைச் செயலாளருக்கு மத்திய சுகாதாரத்துறையின் செயலாளர் ராஜேஷ் பூஷன் எழுதியுள்ள கடித்தத்தில், கொரோனா தடுப்பு பகுதிகளை விரைவாக அடையாளம் கண்டு தனிமைப்படுத்துமாறு கூறியுள்ளார். இரவுநேர ஊரடங்கு, வார இறுதிநாட்கள் ஊரடங்கு உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மிக வேகமாக எடுத்து, வைரஸ் பரவலை துரிதமாக கட்டுப்படுத்துமாறும், கண்காணிப்பை மேம்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளார். அரசின் அனைத்து துறைகளையும் முழுவீச்சில் களமிறக்கி, கொரோனாவைக் கட்டுப்படுத்த பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

தடுப்பூசி பயன்பாடு

கோவாக்சின் மற்றும் கோவிட் ஷீல்டு என இரண்டு வகையான தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இது தொடர்பாக லோக்கல் சர்க்கிள் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் 58 விழுக்காடு பேர் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்வதில் தயக்கம் காட்டுவது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக, மத்திய அரசு, மகாராஷ்டிரா அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் முன்களப் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்வதில் மக்கள் காட்டும் தயக்கத்தை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா நகரங்கள்

மகராஷ்டிராவில் கொரோனா பாதித்த நகரங்களில் விதர்பா முன்னணியில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக, நாக்பூர், அமராவதி ஆகியன உள்ளன. மும்பை மற்றும் பூனே நகரங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. அகோலா, யவாத்மால், வாஷிம், அமராவதி, வார்தா ஆகிய நகரங்களிலும் நாளுக்குள் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. நாசிக் மற்றும் அவரங்காபாத் மாவட்டங்களில் திடீரென கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

லாக்டவுன் நகரங்கள்

தானே, நாக்பூர், பனவல் மற்றும் அவுரங்காபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு மார்ச் 31-ம் தேதி வரை கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மட்டும் கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் அடிப்படை தேவைகளுக்கான சேவையில் பணியாற்றும் பணியாளர்களைத் தவிர மற்ற அரசு அலுவலங்கள் 50 விழுக்காடு ஊழியர்களுடன் பணியாற்றுமாறு அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

மற்ற மாநிலங்களின் விதிமுறைகள்

மகாராஷ்டிராவில் இருந்து டெல்லிக்கு வரும் நபர்கள் கொரோனா வைரஸ் நெகடிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேற்கு மாநிலங்களில் இருந்து வரும் அனைத்து நபர்களும் கொரோனா வைரஸ் பரிசோதனை முடிவுகளை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என ராஜஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்ராவின் இந்தூர் மாவட்ட மாஜிஸ்திரேட் வெளியிட்டுள்ள உத்தரவில், மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து வரும் நபர்கள் கட்டாயம் கொரோனா வைரஸ் பரிசோதனை முடிவுகளை வைத்திருந்தால் மட்டுமே இந்தூருக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் இருந்து செல்வோர் கொரோனா வைரஸ் பரிசோதனை முடிவுகள் இல்லையென்றால் மாநிலத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டர்கள் என கர்நாடகா அரசும் அறிவித்துள்ளது.
Published by:Ram Sankar
First published: