• HOME
 • »
 • NEWS
 • »
 • national
 • »
 • உஷார்! பழைய நாணயங்கள், ரூபாய் நோட்டுகளுக்கு லட்சங்களில் பணம் கிடைப்பது சாத்தியமா?

உஷார்! பழைய நாணயங்கள், ரூபாய் நோட்டுகளுக்கு லட்சங்களில் பணம் கிடைப்பது சாத்தியமா?

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

பழங்கால ராஜா காலத்து நாணயங்களுக்கு நீங்கள் சொல்வதுதான் விலை. அதற்கு யாரும் விலையை நிர்ணயிக்க முடியாது.

 • Share this:
  பழங்கால நாணயங்களை சேகரிக்கும் ஆர்வம் சிலருக்கு இருக்கும். மன்னர் காலத்தில் அச்சிடப்பட்ட நாணயங்கள், சுதந்திர இந்தியாவுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த நாணயங்கள் இல்லையென்றால் அரசு சில முக்கிய விழாக்களை குறிக்கும் வண்ணம் அச்சடிக்கப்பட்ட நாணயங்களை சேமிப்பதை சிலர் ஹாபியாக செய்வார்கள். நாணயங்கள் குறித்த அறிவு மற்றும் தேடல் காரணமாக இந்த பழக்கத்துக்கு வந்திருப்பார்கள். வரலாற்று தகவல்களை கண்டறிவதில் இந்த நாணயங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.

  வரலாற்று துறையில் நாணயங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நாணயம் செய்யப்பட்ட உலோகத்தை வைத்தே அந்நாட்டின் பொருளாதார சூழலை கூற முடியும் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். இதனையே காரணம் காட்டி சிலர் மோசடியில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

  Also Read: Bank Fraud Case | விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சி சொத்துக்களை பொதுத்துறை வங்கிகளிடம் அளித்த அமலாக்கத்துறை

  சுதந்திர இந்தியாவுக்கு முன்பு பிரிட்டன் அரசு வெளியிட்ட நாணயங்கள் உங்களிடம் இருந்தால் பல லட்சங்கள் கிடைக்கும் என்ற விளம்பரங்கள் சமூகவலைத்தளங்களில் கொட்டிக்கிடக்கின்றன. இ-வணிகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் இதுபோன்ற விளம்பரங்களை வெளியிடுகின்றன. இ-வணிகத்தில் மக்களுக்கு சேவை வழங்குகின்ற பிரபலமான பன்னாட்டு நிறுவனங்கள் காயின் சேல்ஸ் என்ற பக்கத்தையும் வைத்துள்ளனர். இந்த விளம்பரங்களை வெளியிடும் நிறுவனங்கள் எங்களிடம் இந்த நாணயங்களை கொடுத்து நீங்கள் பணம் பெற்றுக்கொள்ளுங்கள் எனக் கூறுவதில்லை. பழைய அல்லது விசேஷமான நாணயங்களை விற்க அல்லது வாங்க எங்கள் இணையதளத்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்றே கூறுகிறது. கமிஷன் முறையில் இந்த வியாபாரம் மேற்கொள்ளப்படுகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதுகுறித்து பேசும் நாணயவியலாளர்கள் இந்த விளம்பரங்கள் முழுக்க முழுக்க போலியானது என்ற கருத்தை முன்வைக்கின்றனர். இ-வணிகம் மேற்கொள்ளும் தளத்தில் நாணயங்களை விற்பனை செய்ய விரும்புகிறீர்கள் என்றால் அதற்காக கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதிலும் சில இணையதளங்கள் போன் நம்பரில் இருந்து ஆதார் கார்டு, பான் கார்டு உள்ளிட்ட விவரங்களை கேட்கின்றன. சில இடங்களில் ஜிஎஸ்டி விவரங்கள் கூட கேட்கிறார்கள். இந்த தளங்களில் வணிகம் செய்ய விரும்பினால் பதிவு கட்டணமாக சில ஆயிரங்களை கொடுக்க வேண்டும்.

  Also Read: பொம்மை கார் ஆர்டரில் வந்த ParleG பிஸ்கட்-அமேசான் ஆர்டரில் குழப்பம்!

  ஆசையின் காரணமாக சிலர் ஆயிரங்களை செலவு செய்து பதிவு செய்துவிடுவார்கள். எந்த ரெஸ்பான்ஸூம் வராததால் அதன்பின்னர் நாணயவியலாளர்களை தேடி வருவார்கள். அரசானது பொதுவான நாணயங்கள் வெளியிடும் அதேபோல் சில பிரத்யேக நாணயங்களை வெளியிடும். ரூபாய் நோட்டில் காந்தி படத்தை தவிர வேறு இருக்காது. நீங்கள் நாணயங்களை கவனித்தீர்கள் என்றால் சுதந்திர போராட்ட தியாகிகள், தேசத் தலைவர்கள் படங்கள் இடம்பெற்றிருக்கும். அவர்களது நூற்றாண்டு கொண்டாட்டங்களின் போது இந்த நாணயங்களை அரசு வெளியிட்டிருக்கும். குறிப்பிட்ட எண்ணிக்கையில் வெளியிடப்பட்டிருப்பதால் இந்த நாணயங்கள் மிகவும் அரிதாகவே இருக்கும் எனவே இதுபோன்ற நாணயங்கள் 100-ல் இருந்து 500 ரூபாய் வாங்கப்படலாம். எல்லோரும் என்னிடம் இந்த காசு இருக்கு என இணையத்தில் பதிவிடுவார்கள். ஆனால் உண்மையைச் சொன்னால் இதை வாங்குவதற்கு ஆட்களே இல்லை’ என்கின்றனர் நாணயவியலாளர்கள்.

  அதேபோல் பழங்கால ராஜா காலத்து நாணயங்களுக்கு நீங்கள் சொல்வதுதான் விலை. அதற்கு யாரும் விலையை நிர்ணயிக்க முடியாது. உங்கள் பொருளுக்கு எப்படி மற்றவர்கள் விலை நிர்ணயிக்க முடியும் என்ற கேள்வியை முன்வைக்கிறார்கள். நாணய சேகரிப்பாளர்கள் நாணயங்கள் குறித்து அறிவு உள்ளவர்கள் இதுபோன்ற விஷயங்களில் ஏமாறுவது இல்லை. சாதாரண பொதுமக்கள் இதில் சிக்கிக்கொள்கிறார்கள். உங்களால் அந்த நிறுவனம்தான் பயணடைகிறது இது ஒரு வியாபார யுக்தி எனக் கூறுகின்றனர்.

  இந்த காயின் விவகாரத்தில் இன்னொரு சிக்கலும் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது இந்த இணையத்தில் பதிவு செய்துள்ள தகவல்களை கொண்டு மோசடி கும்பல் கைவரிசை காட்டுவதாக கூறப்படுகிறது. இணையத்தில் நாம் பதிவு செய்துள்ள எண்ணை வைத்து நம்மை தொடர்பு கொள்ளும் கும்பல்கள் உங்களிடம் இருக்கும் காயினை இந்த விலைக்கு வாங்கிக்கொள்கிறேன் என போன் செய்வார்கள். வங்கி மோசடி செய்யும் கும்பல்கள் நான் பேங்க்-ல இருந்து பேசுறேன் சார். உங்க ஏடிஎம் கார்ட் நம்பர் சொல்லுங்கன்னு கால் செய்கிறார்களோ அதேபாணியைத் தான் இதிலும் கையாளுகிறார்கள்.

  நான் வெளிநாடுகளில் இருக்கேன். எங்கள் பகுதியில் ஒரு அருங்காட்சியகம் அமைக்க போறோம் அதற்குதான் இந்த நாணயம் தேவைப்படுது எனப் பேசுவார்கள். நீங்கள் உஷாராக அவர்களின் வார்த்தைகளை கவனித்தால் காயின் வாங்குவதைவிட பணம் பெறுவதே அவர்களின் நோக்கமாக இருப்பதை அறிய முடியும். வெளிநாட்டுல இருக்குறதால் உங்களுக்கு பணம் அனுப்ப சில வேலைகள் செய்ய வேண்டும். நீங்கள் சில ஆயிரங்களை எனக்கு அனுப்புங்கள். நான் அதையும் சேர்த்து உங்களுக்கு திரும்பி அனுப்புகிறேன் என்பார்கள். இந்தப்பேச்சுகளை நம்பி காசு அனுப்பினால் அவ்வளவுதான் அப்புறம் அந்த நபரை தொடர்புக்கொள்ள முடியாது. இதுபோன்ற மோசடிகளும் அரங்கேறுவதாக கூறப்படுகிறது. மக்களே உஷார்..  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Ramprasath H
  First published: