பொதுத்துறையைச் சேர்ந்த இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷேன் நிறுவனம் சந்தை மூலதனத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாயை எட்டி புதிய சாதனை படைத்திருக்கிறது.
இந்திய ரயில்வேக்கு ஆன்லைன் ரயில்வே டிக்கெட் புக் செய்வது, உணவு மற்றும் தண்ணீர் பாட்டில் சப்ளை செய்து வரும் ஐ.ஆர்.சி.டி.சி ஒரு பொதுத்துறை நிறுவனமாகும், தற்போது சில சுற்றுலா ரயில்களை இயக்கவும் இந்நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மும்பை பங்குச்சந்தையில் ஐ.ஆர்.சி.டி.சியின் பங்கு மதிப்பு நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியது.
நேற்றைய வர்த்தக நாளின்போது ஐ.ஆர்.சி.டி.சியின் பங்கு ஒன்றில் விலை 6,384.14 ரூபாயாக அதிகரித்தது. அதன் மூலம் பங்குச்சந்தை மூலதனத்தில் அந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாயை கடந்தது. ஒட்டுமொத்தமாக ஐ.ஆர்.சி.டி.சியின் மூலதனம் 1.02 லட்சம் கோடியாக அதிகரித்தது. இதன் மூலம் பங்குச்சந்தை மூலதனத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாயை கடந்த 9வது பொதுத்துறை நிறுவனம் என்ற பெருமையை ஐ.ஆர்.சி.டி பெற்றது.
Also read:
ஆன்லைன் வகுப்பின்போது மொபைல் வெடித்து 5ம் வகுப்பு மாணவன் பலி!
முன்னதாக எஸ்.பி.ஐ, கோல் இந்தியா, என்.எம்.டி.சி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பவர் கிரிட் கார்ப்பரேஷன், எஸ்.பி.ஐ லைஃப் இன்சூரன்ஸ், பாரத் பெட்ரோலியம், எஸ்.பி.ஐ கார்ட்ஸ் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் சந்தை மூலதனத்தில் ஒரு லட்சம் கோடிய எட்டிய நிறுவனங்களாக உள்ளன.
இருப்பினும் வர்த்தக நாளின் கடைசி ஒரு மணி நேரத்தில் 16% அளவுக்கு ஐ.ஆர்.சி.டி.சியின் பங்கு விலை சரிந்தது. இறுதியாக பங்கு ஒன்றின் விலை 5,363 ரூபாய் என்ற மதிப்புடன் நிறைவடைந்தது. நேற்றைய வர்த்தக நாளின் இறுதியாக ஐ.ஆர்.சி.டி.சியின் பங்கு மூலதனம் 85,808 கோடி ரூபாயாக இருந்தது.
Also read:
காங்கிரசுடன் கசந்த உறவு.. அமரிந்தர் சிங் புதிய கட்சி தொடங்குகிறார்! – பாஜகவுக்கு ஆதரவு?
இந்த ஆண்டில் மட்டும் ஐ.ஆர்.சி.டி.சியின் பங்கு மதிப்பு 3.3 மடங்கு உயர்ந்துள்ளது. ரயில்வேதுறையில் மத்திய அரசு சில மாற்றங்களை கொண்டுவர இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் ஐ.ஆர்.எப்.சி, ரைட்ஸ் போன்ற இதர ரயில்வேதுறையை சார்ந்த நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பும் கடுமையாக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
தொடர் சரிவு:
ஆனால் இன்றைய தினம் ஐ.ஆர்.சி.டி.சி பங்குகள் தொடர் சரிவை சந்தித்துள்ளன. இன்றைய வர்த்தகத்தின் போது ஐ.ஆர்.சி.டி.சி பங்கு ஒன்றில் விலை 4,462.95 ரூபாயாக வர்த்தகம் ஆகி வருகிறது. பங்குகளின் மதிப்பில் 22% அளவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.