டெல்லிக்கு குறி வைத்த சுலைமானி...? ட்ரம்ப் குற்றச்சாட்டை மறுக்கும் இந்தியாவுக்கான ஈரான் தூதர்

டெல்லிக்கு குறி வைத்த சுலைமானி...? ட்ரம்ப் குற்றச்சாட்டை மறுக்கும் இந்தியாவுக்கான ஈரான் தூதர்
ட்ரம்ப்
  • News18
  • Last Updated: January 5, 2020, 7:22 AM IST
  • Share this:
அமெரிக்கா படைகளால் கொல்லப்பட்ட ஈரானின் முக்கிய தளபதி சுலைமானி டெல்லி வரை பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டுடிருந்ததாக அதிபர் ட்டிரம்ப் கூறியதை, இந்தியாவுக்கான ஈரான் தூதர் மறுத்துள்ளார்.

ஈரான் அதிபர் அயதுல்லா கோமேனிக்கு அடுத்ததாக அதிகாரமிக்க தளபதியாக இருந்த குவாசெம் சுலைமானி அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்டார். இது குறித்து விளக்கம் அளித்துள்ள அதிபர் ட்ரம்ப், சுலைமானியை கொன்றதன் மூலம், அவரது பயங்கரவாத சாம்ராஜ்யத்திற்கு முடிவு கட்டப்பட்டுள்ளது என்றும், சுலைமானியின் அட்டூழியங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டுள்ளது என்றும் ட்ரம்ப் கூறினார்.

நூற்றுக்கணக்கான அமெரிக்கர்களை ஈவு இரக்கமின்றி, சுலைமானி கொன்றதாக கூறிய ட்ரம்ப், மத்திய கிழக்கு நாடுகளை கடந்த 20 ஆண்டுகளாக பயங்கரவாதத்தின் பிடியில் வைத்திருத்ததாக கூறினார். சுலைமானியின் பயங்கரவாதம் டெல்லி மற்றும் லண்டன் வரை பரந்திருந்ததாக தெரிவித்தார்.


எனினும், ட்ரம்பின் இந்த குற்றச்சாட்டை இந்தியாவுக்கான ஈரான் தூதர் மறுத்துள்ளார்.

2012-ம் ஆண்டில் டெல்லியில் இஸ்ரேலிய தூதரக அதிகாரியின் மனைவி சென்ற காரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலை ட்ரம்ப் சுட்டிக்காட்டியிருக்கலாம் என கூறப்படுகிறது.

காந்தத்தின் மூலம் காரில் ஒட்டவைக்கப்பட்ட வெடிகுண்டு மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு ஈரானே காரணம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு குற்றம்சாட்டியிருந்தார்.ஈரானை சேர்ந்த அணுசக்தி விஞ்ஞானி முஸ்தபா அகமதி ரோஷனை, கார் வெடிகுண்டு தாக்குதலில் இஸ்ரேலியர்கள் கொன்றதாகவும், அதற்கு பழிவாங்கும் வகையில் டெல்லி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது. ட்ரம்பின் கருத்துக்கு இந்தியா இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.

இதனிடையே ஈராக்கின் ஜட்ரியாக் நகரில் நடைபெற்ற சுலைமானியின் இறுதி ஊர்வலத்தில் அந்நாட்டு பிரதமர் அடெல் அப்துல் மஹாதி பங்கேற்றார். ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் கறுப்பு உடை அணிந்து, ஈரான் மற்றும் ஈராக் கொடிகளை ஏந்தியவாறு சென்றனர்.

ஈரான் மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு இடையே அதிகரித்துள்ள திடீர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 70 டாலர்களாக அதிகரித்துள்ளது. இது கடந்த 3 மாதங்களில் இல்லாத உயர்வாகும். அமெரிக்காவின் தொடர் அழுத்தம் காரணமாக, ஈரானிடமிருந்த கச்சா எண்ணெய் இறக்குமதியை வெகுவாக குறைத்துக்கொண்ட இந்தியா எரிபொருளுக்கு தற்போது ஈராக்கை பெருமளவில் நம்பியுள்ளது. இந்நிலையில், அப்பிராந்தியத்தில் ராணுவ நடவடிக்கைகள் அதிகரித்தால், இந்தியாவுக்கு பெரும் சிக்கல் ஏற்படும்.


First published: January 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்