ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ள நிலையில், அங்கு துணை நிலை ஆளுராக யார் நியமிக்கப்படுவார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் சட்டப்பிரிவு 370-ஐ கடந்த வாரம் மத்திய அரசு, நாடாளுமன்றம் மூலமாக ரத்து செய்தது.
மேலும், ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரித்து லடாக் பகுதியை ஒரு யூனியன் பிரதேசமாகவும், ஜம்மு காஷ்மீர் பகுதியை மற்றொரு யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டது.
லடாக் பகுதி சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் (அந்தமான், லட்சத்தீவுகள் போல), ஜம்மு காஷ்மீர் பகுதி சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும் (டெல்லி, புதுச்சேரி போல) மாற்றப்பட்டது.
இதற்கான மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத்தலைவர் ஒப்புதலுடன் அரசிதழில் வெளியிடப்பட்டது.
வரும் அக்டோபர் மாதம் 31-ம் தேதி (சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம் முதல் ஜம்மு காஷ்மீர், மற்றும் லடாக் யூனியன் பிரதேச சட்டங்கள் அமலுக்கு வருகிறது.

காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக்
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் துணை நிலை ஆளுநராக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. லடாக் பகுதியை ஒப்பிடுகையில் ஜம்மு காஷ்மீர் பகுதி பதற்றம் நிறைந்ததாக இருப்பதால், மிக திறமையான நபர் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
பொதுவாக மாநிலங்களில் இருக்கும் ஆளுநர்கள் ‘ரப்பர் ஸ்டாம்ப்’ பொறுப்பில் இருப்பார்கள். ஆனால், யூனியன் பிரதேசங்களில் முக்கிய அதிகாரங்கள் மத்திய அரசின் வசம் இருப்பதால், துணை நிலை ஆளுநர் பதவி அதிகாரம் மிக்கதாக கருதப்படுகிறது.
ஜம்மு காஷ்மீரின் தற்போதைய ஆளுநர் சத்ய பால் மாலிக், மீண்டும் துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.
ஜம்மு காஷ்மீரில் இனி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைந்தாலும் முக்கிய அதிகாரங்கள் மத்திய அரசின் வசம் இருக்கும் என்பதால், மத்திய அரசின் நேரடி பிரதிநிதியான துணை நிலை ஆளுநரின் பொறுப்புக்கு இப்போதே போட்டி தொடங்கியுள்ளது.
தற்போது ஜம்மு காஷ்மீர் ஆளுநரின் பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் விஜயகுமார் போட்டியின் முதலிடத்தில் இருக்கிறார். தமிழகத்தைச் சேர்ந்த விஜய குமார் காவல் துறையில் பல முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.
பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை, எல்லைப் பாதுகாப்பு படை உள்ளிட்ட பல பாதுகாப்பு படைகளில் விஜய குமார் பணியாற்றியுள்ளார்.
குறிப்பாக வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட படையின் தலைமைப் பொறுப்பில் விஜயகுமார் நியமிக்கப்பட்டு, அதில் வெற்றியும் கண்டார்.
மத்திய உள்துறையில் கூடுதல் இயக்குநராக இருந்த விஜயகுமார், சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜம்மு காஷ்மீர் ஆளுநரின் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
370 சட்டப்பிரிவு நீக்கப்பட்ட விவகாரத்தில் விஜய குமாரின் பங்கு மிக முக்கியமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதேபோல, காஷ்மீருக்கான மத்திய அரசின் சிறப்புப் பிரதிநிதி தினேஷ்வர் சர்மாவும் துணை நிலை ஆளுநர் போட்டியில் உள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.