சொந்த வீடு வாங்குவதில் ஆர்வம் காட்டும் மக்கள்.. ரியல் எஸ்டேட் துறையில் மீண்டும் அதிகரிக்கும் முதலீடுகள்.. சர்வே ரிப்போர்ட்..

Real estate

தேவையில்லாத அபாயங்களை தவிர்க்க ஒப்பீட்டளவில் விலை அதிகமாக இருந்தாலும் 61%-க்கும் அதிகமானவர்கள் பிராண்டட் டெவலப்பர்களிடமிருந்தே வீட்டுமனை வாங்க விரும்புகிறார்கள் என்று CII-ANAROCK COVID-19 சென்டிமென்ட் என்ற கணக்கெடுப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

  • Share this:
கொரோனா தொற்று காரணமாக வீட்டில் இருந்து வேலை பார்ப்பது என்பது ஒரு வழக்கமாக மாறிவிட்டதால் புதிதாக வீடு வாங்குபவர்கள், பெரிய வீடுகளை மலிவு விலையில் வாங்க புறநகர் பகுதிகளில் இடங்களையும் தேடி வருகின்றனர். மேலும் தேவையில்லாத அபாயங்களை தவிர்க்க ஒப்பீட்டளவில் விலை அதிகமாக இருந்தாலும் 61%-க்கும் அதிகமானவர்கள் பிராண்டட் டெவலப்பர்களிடமிருந்தே வீட்டுமனை வாங்க விரும்புகிறார்கள் என்று CII-ANAROCK COVID-19 சென்டிமென்ட் என்ற கணக்கெடுப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கணக்கெடுப்பின்படி, தொடக்கத்தில் வீழ்ச்சியை சந்தித்து பின்னர் மீண்டும் ஓரளவு முதலீட்டை ஈர்த்து வந்த ரியல் எஸ்டேட் துறை, கடந்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் போடப்பட்ட கொரோனா ஊரடங்கு காரணமாக மீண்டும் வீழ்ச்சியை கண்டது. மேலும் நிலவி வந்த நிச்சயமற்ற தன்மைகள் காரணமாக சுமார் 48% வரை சரிவைக் கண்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது மக்களிடையே மீண்டும் அதிகரித்து வரும் விருப்பத்தால் H2 2020 ஹோஸிங் விற்பனையில் முதல் 7 நகரங்களில் 80,400 யூனிட்டுகள் இடம்பெற்றதாகவும் இது H1 2020-ல் 57,900 யூனிட்டுகளுடன் ஒப்பிடும்போது, 39% அதிகரிப்பு எனவும் கூறப்படுகிறது.

பங்குகள் மற்றும் பரஸ்பர நிதிகள், எஃப்.டி கள் மற்றும் தங்கம் போன்ற முதலீட்டிற்கான பல்வேறு சொத்து சேமிப்பு விருப்பங்களில், தற்போது ரியல் எஸ்டேட் முதல் தேர்வாக தொடர்கிறது. இது தொடர்பான கணக்கெடுப்பில் பதிலளித்த 57%-த்தினர் அதற்கு ஆதரவாக உள்ளனர். சுவாரஸ்யமாக, பங்குச் சந்தை நிலையற்றதாக இருந்தாலும் சுமார் 24%-த்தினரின் இரண்டாவது விருப்பமான அதனை தேர்வு செய்வதாக கூறியுள்ளனர்.

அதேபோல ஊரடங்கு காலத்தில் FD-க்களை தாண்டி தங்கத்தின் மீதான சேமிப்பு விருப்பம் திடீரென 18% உயர்ந்தது. ஆனால் தற்போதைய கணக்கெடுப்பில் பதிலளித்தவர்களில் 12%-த்தினர் மட்டுமே தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவதாக தெரியவந்துள்ளது. அதேபோல ஆபத்து இல்லாத போதிலும், குறைந்த வட்டி விகிதங்கள் காரணமாக FDகளில் முதலீடு செய்யும் ஆர்வம் குறைத்துள்ளன. எனவே FDக்கள் மற்ற அனைத்து சொத்து சேமிப்பு விருப்பங்களை காட்டிலும் கடைசி தேர்வாக உள்ளது. சுமார் 7% மட்டுமே இதில் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

மேலும் வீட்டுமனைகளை வாங்க ஏற்கனவே 24% பேர் முன்பதிவு செய்துள்ளனர் என்றும் 62% பேர் தற்போது ரியல் எஸ்டேட் சந்தையில் நுழைவதற்கு ஏற்றதாக இருக்கும் என்றும் கருதுகின்றனர். இந்திய குடியிருப்பு சந்தையில் இப்போது முதலீட்டாளர்கள் நேரடி வாடிக்கையாளர்களாக பெரிதும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். ஒரு வீட்டுமனையை வாங்க விரும்பும் 74% பதிலளித்தவர்கள் இப்போது அதை சுய பயன்பாட்டிற்காக வாங்க விரும்புகிறார்கள். அதே நேரத்தில் 26% பேர் அதை முதலீட்டு கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள். ஊரடங்கு காலத்தோடு ஒப்பிடுகையில் முதலீட்டாளர்களின் பங்கு 41% அதிகமாக இருந்தது என கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

அதிலும் கணக்கெடுப்பில் பதிலளித்தவர்களில் சுமார் 29% பேர் வீட்டுமனைக்கு பதிலாக புதிதாக கட்டப்பட்ட வீடுகளை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும், கொரோனாவுக்கு முந்தைய மற்றும் ஊரடங்கு கால ஆய்வுகள் இரண்டையும் ஒப்பிடுகையில், அதன் விருப்பத்தேர்வில் சரிவைக் கண்டதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. அதாவது ஊரடங்கு காலத்திலிருந்து குறைந்தது 17% மற்றும் கொரோனாவுக்கு முந்தைய நிலைகளில் இருந்து 6% குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.  சுவாரஸ்யமாக, கொரோனாவுக்கு பிந்தைய கணக்கெடுப்பு முடிவுகளில், 1 வருடத்திற்குள் தயாராக இருக்கும் வீட்டுமனை சொத்துக்களில் சுமார்  27% -த்தினர் முதலீடு செய்ய இரண்டாவது விருப்பமாக தேர்வு செய்துள்ளனர்.

இதுதவிர கொரோனாவுக்கு பிந்தைய கணக்கெடுப்பின்படி, ரூ. 45 லட்சத்திற்கும் குறைவான பட்ஜெட் கொண்ட சொத்துக்கள் வாடிக்கையாளர்களிடையே மிகவும் விரும்பத்தக்கதாக உள்ளது. இது கொரோனாவுக்கு முந்தைய கணக்கெடுப்பில் 31% ஆக இருந்ததை விட 40% க்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ளது. அதாவது இதன் விருப்பம் 9% அதிகரித்துள்ளது. COVID-க்கு பிந்தைய கணக்கெடுப்பில் இந்த மலிவு வீட்டுவசதி கோரிக்கையில் 38% க்கும் அதிகமானவை டெல்லி-என்.சி.ஆரிலிருந்து வந்தன மற்றும்  21% கொல்கத்தாவிலிருந்து வந்தன.

இதையடுத்து, ரூ .90 லட்சம் பட்ஜெட் கொண்ட வீட்டுவசதி, மக்களின் விருப்பத்தில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த விருப்பத்திற்காக 67% கோரிக்கை பெங்களூரு, புனே மற்றும் சென்னையிலிருந்து வந்தது. அதேபோல ரூ.1.5 கோடிக்கும் அதிகமான ஆடம்பர சொத்துக்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு முந்தைய கணக்கெடுப்பில் 9% இருந்த விருப்பம் அதன் பிறகு 11% ஆக அதிகரித்துள்ளது. இதற்கான 58% கோரிக்கை கிட்டத்தட்ட மும்பை (எம்.எம்.ஆர்), பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் இருந்து வந்ததாக கணக்கெடுப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Published by:Ram Sankar
First published: