நாட்டின் பல்வேறு இடங்களில் அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், பீகாரில் 18க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு எதிராக பீகார், உத்தரப் பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 250க்கும் மேற்பட்டோரை உத்தரப் பிரதேச காவல்துறை கைது செய்துள்ளனர். இவர்கள், பொது சொத்துக்களை தடியால் அடித்தும், கல்லெறிந்து சேதப்படுத்திய குற்றத்திற்காக கைது செய்துள்ளனர்.
இந்த போராட்டத்தின் காரணமாக 200க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. 35 ரயில்கள் ரத்தாகியுள்ளன. இந்த போராட்டத்தில் ஒரு உயிரிழப்பு பதிவான நிலையில், பலர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். போராட்டம் மிகத் தீவிரமாகக் காணப்படும் பீகாரில் 18 மாவட்டங்களில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. இணையதளம் மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டு போராட்டக்காரர்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கவே இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
அதேபோல் ஹரியானா மாநிலத்திலும் அடுத்த 24 மணிநேரத்திற்கு இணைய சேவை மற்றும் எஸ்எம்எஸ் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. இந்த போராட்டம் வட மாநிலங்களில் மட்டுமல்லாது தென் மாநிலமான தெலங்கானாவிலும் பரவியுள்ளது. நேற்று போராட்டத்தினால் நடைபெற்ற கலவரத்தில் 24 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார். 13 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார்.
இதையும் படிங்க: அம்மாவுக்கு இணையான சொல் இல்லை.. தாய் பிறந்தநாளில் மோடி நெகிழ்ச்சி
இந்த சூழலில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடற்படை மற்றும் விமானப் படை தளபதிகளுடன் இன்று காலை அவசர ஆலோசனை மேற்கொண்டார். அதேபோல், போராட்டக்காரர்கள் ரயில் உள்ளிட்ட பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தக்கூடாது என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் கோரிக்கை வைத்துள்ளார். பீகாரில் போராட்டக்காரர்கள் அம்மாநில துணை முதலமைச்சர் ரேணு தேவி வீட்டில் நேற்று தாதக்குதல் நடத்தியுள்ளனர். எதிர்க்கட்சிகள் தான் இளைஞர்களை தவறாக வழிநடத்தி போராட்டத்தை தூண்டி விடுவதாக பீகார் துணை முதலமைச்சர் ரேணு தேவி புகார் தெரிவித்துள்ளார். அதேவேளை, இளைஞர்களின் போராட்டத்திற்கு ஆதாரவு நிலைப்பாட்டில் காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் உள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.