பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில், சிவசேனா அமைப்பு சார்பில் காலிஸ்தான் இயக்கத்துக்கு எதிராக ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த ஊர்வலத்தை மாநிலத்தின் முன்னணி கட்சி தலைவரான ஹரீஷ் சிங்கலா தலைமை தாங்கி நடத்தினார். ஊர்வலம் அங்குள்ள காளி கோயிலை எட்டியபோது, காலிஸ்தான் ஒழிக என ஊர்வலத்தில் கோஷம் எழுந்துள்ளது. இதையடுத்து அங்கிருந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.
இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்து அது வன்முறையாக மாறியுள்ளது. அங்கு நடைபெற்ற கல்வீச்சு சம்பவம் காரணமாக காவல்துறையினர் உள்ளிட்ட நான்கு பேர் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர். உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் கவலரக்காரர்களை கைது செய்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும், ஊர்வலத்தை முன்னின்று நடத்திய ஹரீஷ் சிங்லா கைது செய்யப்பட்டார்.
இந்த மோதல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மாநில முதலமைச்சர் பகவத் மன் அவசர ஆலோசனை நடத்தினர். அங்கு சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட, நேற்று மாலை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அத்துடன் இன்று நாள் முழுவதும் இணையதளம் மற்றும் எஸ்எம்எஸ் சேவை முடக்கப்பட்டுள்ளது. மேலும், ஒழுங்கு நடவடிக்கையாக பாட்டியாலா ஐஜி, எஸ்பி ஆகியோர் இடமாற்றம் செய்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து பாட்டியாலாவின் புதிய ஐஜியாக முக்விந்தர் சிங் சின்னா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த மோதல் சம்பவம் குறித்து விசாரிக்க மகாராஷ்டிராவில் உள்ள சிவசேனா தலைமை பஞ்சாப் மாநில கட்சி தலைமைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், ஊர்வலத்தை நடத்திய சிவசேனாவின் ஹரீஷ் சிங்லாவை கட்சியை விட்டு நீக்கியுள்ளது. இந்த சம்பவம் கவலை அளிப்பதாகவும், எல்லையில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த பஞ்சாப் மாநிலத்தில் அமைதி மற்றும் ஒற்றுமை அவசியம் எனவும் ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அத்துடன், பஞ்சாப் மாநில அரசு சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க:
வேறு நபருடன் திருமணம்.. மண்டபத்தில் காதலியை சுட்டுக்கொலை செய்த காதலன்.. உபியில் பயங்கரம்
இது வருந்தத்தக்க சம்பவம் என கூறியுள்ள மாநில முதலமைச்சர் பகவத் மன், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை தொந்தரவு செய்ய யாரையும் அரசு அனுமதிக்காது என உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.