ஒவ்வொரு ஆண்டும் உலக மகளிர் தினத்தில் பல துறை சார்ந்த பல பெண்கள் பற்றி பார்க்கிறோம். பல சாதித்த பெண்கள் குறித்தும் தெரிந்துகொள்கிறோம். ஆனால், நாம் பெரிதாக திரும்பி பார்க்காத ஒரு இடம் இருக்கிறது. கொண்டாட மறந்த ஒரு விஷயம் இருக்கிறது. அது, இந்தியாவின் மறைந்த பெண் விஞ்ஞானிகள்.
பல ஆண்டுகளுக்கு முன் தொழில்நுட்ப வளர்ச்சியே பெரிதாக இல்லாத நேரத்தில், குறிப்பாக பெண்களுக்கு பெரிதாக சுதந்திரமே இல்லாத காலகட்டத்தில் இந்த பெண்கள் இப்படி சாதித்து இருக்கிறார்களே என நினைக்கும்போது உத்வேகமாக தோன்றும். அந்த வரிசையில், முக்கியமான நான்கு இந்திய பெண் விஞ்ஞானிகள் குறித்து பார்க்கலாம்.
ஏ.கே. ஜானகி அம்மாள்:
1897-ல் பிறந்து 1984-ல் காலமானார். இவர் ஒரு இந்திய தாவரவியலாளர், மரபியல் வல்லுநர். கரும்புகளின் சைட்டோஜெனிடிக்ஸ் மற்றும் புதிய வகை கரும்புகளின் இனப்பெருக்கம் பற்றிய ஒரு முன்னோடி ஆராய்ச்சிக்காக இவர் அறியப்பட்டார். மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் அந்த காலத்திலேயே தாவரவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணியும் இவர்தான்.
இந்திய அறிவியல் அகாடமியின் fellow-ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்ணும் இவர்தான். ஜானகி அம்மாள் தமிழ்நாட்டில் பிறந்தவர். இவரது குடும்ப பின்னணியும் தாவரங்கள் குறித்து அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்டவர்களாக இருந்துள்ளனர். தாவரவியலில் பிஎச்டி முடித்த பிறகு, இங்கிலாந்தில் உள்ள ஜான் இன்ஸ் தோட்டக்கலை நிறுவனம் மற்றும் கோயம்புத்தூரில் உள்ள கரும்பு வளர்ப்பு நிறுவனம் உட்பட அமெரிக்கா மற்றும் இந்தியாவில் உள்ள பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்களில் பணியாற்றி இருக்கிறார்.
இந்தியாவின் தாவர பல்லுயிர் பாதுகாப்பிற்கு இவருடைய பங்கு முக்கியமானது. ஜானகி அம்மாள் தனது வாழ்நாளில் பத்மஸ்ரீ உட்பட பல விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றுள்ளார். இன்று அவர் ஒரு முன்னோடி விஞ்ஞானியாகவும் அறிவியலில் பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும் நினைவுகூறப்படுகிறார்.
அசிமா சாட்டர்ஜி:
இந்தியாவின் முதல் பெண் வேதியலாளர் இவர். அசிமா சாட்டர்ஜி கல்கத்தாவில் 1917-ல் பிறந்து 2006ல் காலமானார். கரிம வேதியியல் துறையில் தன்னுடைய சீறிய பணிக்காக அறியப்பட்ட இந்திய வேதியியலாளர். இந்தியாவில் அறிவியல் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண் இவர்தான்.
ஆல்கலாய்டுகள், கூமரின்கள் மற்றும் பிற கரிம சேர்மங்களை புரிந்துகொள்வதில் சாட்டர்ஜி குறிப்பிடத்தக்க பங்களிப்பை கொடுத்திருக்கிறார். அவரின் பணி கால்-கை வலிப்பு, மலேரியா சிகிச்சைக்கான முக்கியமான மருந்துகளை உருவாக்க வழிவகுத்தது. அறிவியலுக்கான அவரின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், அசிமா சாட்டர்ஜிக்கு அவரது வாழ்நாளில் ஏராளமான விருதுகள் வழங்கப்பட்டது. இதில், பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் உட்பட இந்தியாவின் மிக உயரிய சிவிலியன் விருதுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. 1975-ல் இந்திய அறிவியல் காங்கிரஸின் தலைவராக நியமிக்கப்பட்ட முதல் பெண்மணியும் இவர்தான்.
ராஜேஷ்வரி சாட்டர்ஜி:
ராஜேஷ்வரி சாட்டர்ஜி 1922-ல் பிறந்து 2010ஆம் ஆண்டு காலமானார். இவர் ஒரு இந்திய மின் பொறியாளர் மற்றும் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த முதல் பெண் பொறியாளர். இந்தியாவின் ரேடார் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கிய மைக்ரோவேவ் பொறியியலில் தன்னுடைய முக்கிய பணிக்காக ராஜேஷ்வரி சாட்டர்ஜி அறியப்படுகிறார்.
இவர் பெங்களூருவில் பிறந்து மைசூர் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் மற்றும் கணிதத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸில் படித்து இயற்பியலில் முதுகலைப் பட்டம் வாங்கியவர். தன்னுடைய கல்வி காலத்திற்குப் பிறகு, பெங்களூருவில் உள்ள இந்திய தொலைபேசி தொழில்துறையில் சேர்ந்து அங்கு அவர் மைக்ரோவேவ் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் பணியாற்றினார்.
அதன் பிறகு, இந்திய அறிவியல் கழகத்திலும் பேராசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவராக பணியாற்றினார் ராஜேஷ்வரி சாட்டர்ஜி. மேலும், பத்ம பூஷன் உட்பட இந்தத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக பல விருதுகளும் கௌரவங்களும் வழங்கப்பட்டது.
கல்பனா சாவ்லா:
மறைவுக்குப் பிறகும் ஒருவரின் பெயரே உலகேங்கிலும் உள்ள மக்களை ஊக்கப்படுத்தும் என்றால் அது அப்துல் கலாம் மட்டுமல்ல, கல்பனா சாவ்லாவும் கூட. அந்த அளவிற்கு ஒரு ஹீரோவாக இன்றும் அறியப்படுகிறார். குறிப்பாக, 80, 90களில் பிறந்தவர்களுக்கு பள்ளி பருவத்தில் புத்தகத்தின் அட்டைப்படத்தில் இவரை பார்க்கும்போதே உத்வேகம் அளிக்கும் வகையில் இருக்கும். கல்பனா சாவ்லா 1962-ல் பிறந்து 2003-ல் விண்வெளி வீராங்கனையாய் பூமியை நெருங்கும் சில நொடிகளுக்கு முன்பு உயிரிழந்தார்.
அதை யாரும் மறந்திருக்க மாட்டோம். இவர் ஒரு இந்திய-அமெரிக்க விண்வெளி வீராங்கனை. விண்வெளிக்குச் சென்ற முதல் இந்திய வம்சாவளி பெண் இவர்தான். ஹரியானாவில் பிறந்து சண்டிகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் ஏரோனாட்டிகல் இன்ஜினரிங்கில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். அதன் பிறகு தன்னுடைய பட்டப்படிப்பை தொடர அமெரிக்கா சென்றார். அங்கு டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் விண்வெளிப் பொறியியலில் முதுகலை அறிவியல் பட்டமும், Colorado Boulder பல்கலைக்கழகத்தில் ஏரோஸ்பேஸ் இன்ஜினரிங்-ல் Philosophy-ல் முனைவர் பட்டமும் வாங்கியிருக்கிறார்.
பின்னர், 1995-ல் நாசாவில் சேர்ந்தார் கல்பனா. 1997-ல் Space Shuttle Columbia-வில் பணி நிபுணராக தன்னுடைய முதல் பயணத்தை மேற்கொண்டார். விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியப் பெண்மணி என்கிற பெருமைக்குச் சொந்தக்காரரானார். 252 முறை பூமியை வலம் வந்தவர். அதாவது, 10 மில்லியனுக்கும் அதிகமான கிலோமீட்டர், 15 நாட்கள், 12 மணிநேரம், 34 நிமிடங்கள் சுற்றியிருக்கிறார். அதன் பிறகு, சற்றும் எதிர்பாராமல் அவரின் வாழ்க்கை 2003ஆம் ஆண்டுலேயே முடிவுக்கு வந்தது.
2003ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி விண்வெளிக்கு தொடங்கிய கல்பனா சாவ்லாவின் பயணம் முற்றுப் பெறாமல் பிப்ரவரி 1ஆம் தேதி பூமியை தொடுவதற்கு சற்று நேரமே இருந்தபோது கல்பனா சென்ற கொலம்பியா விண்வெளி விமானம் வெடித்து சிதறியது. அவருடன் பயணித்த மற்ற ஆறு விண்வெளி வீரர்களோடு கல்பனாவும் உயிரிழந்தார்.
மகளிர் தினம் : உடல் தோற்றம் குறித்த புதிய பிரச்சாரத்தை முன்னெடுத்த நீடா அம்பானி!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.