பெட்ரோல், டீசல் விலையை குறையுங்கள், இதனால் ராம பக்தர்களுக்கு உணவு கிடைக்கும்: சிவசேனா வலியுறுத்தல்

பெட்ரோல், டீசல் விலை

காங்கிரஸ் ஆட்சியில்தான் இந்தியன் ஆயில், ஓ.என்.ஜி.சி, பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவற்றை கட்டி எழுப்பியது. ஆனால் மோடி அவர்கள் உருவாக்கியதை தனியாருக்கு விற்றுக் கொண்டே அவர்களையே குறைகூறுகிறார்.

  • Share this:
    ராமர் கோவிலுக்கு நிதி திரட்டுவதற்கு பதிலாக பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என மத்திய அரசை சிவசேனா வலியுறுத்தி உள்ளது.

    நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒரு சில இடங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டி உள்ளது. இந்தநிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வில் சிவசேனா கட்சி மத்திய அரசை கடுமையாக விமர்சித்து உள்ளது.

    தங்களது கட்சி பத்திரிகையான சாம்னாவில் இது தொடர்பாகக் கூறப்பட்டதாவது:

    மக்களுக்கு வாழ்வதற்கான உரிமை உள்ளது. மத்திய அரசு இதனை மறந்தால் பிறகு மக்களுக்கு அரசுக்கு நினைவூட்டும் கடமை உள்ளது.

    மத்திய அரசால் அமைக்கப்பட்ட ராமஜென்ம பூமி அறக்கட்டளை அயோத்தியில் ராமா் கோவில் கட்டுவதற்கான நிதியை திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறது. நாடு முழுவதும் கோவில் கட்ட நன்கொடை வசூலிக்கும் பணி கடந்த மாதம் தொடங்கப்பட்டது. ராமர் கோவில் கட்ட பணம் வசூலிப்பதற்கு பதிலாக பெட்ரோல், டீசல் விலையை குறையுங்கள். இதனால் ராம பக்தர்களுக்கு உணவு கிடைக்கும். ராமரும் சந்தோஷப்படுவார்.

    கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது நடிகர்கள் அக்சய்குமார், அமிதாப் பச்சன் போன்றவர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக கருத்து தெரிவித்து இருந்தனர். தற்போது பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்த போதும் சினிமா நட்சத்திரங்கள் மவுனமாக உள்ளனர். 2014-ம் ஆண்டு வரை கருத்து கூற சுதந்திரம் இருந்தது. அரசை விமர்சிப்பவர்கள் தேசதுரோக வழக்கில் சிறையில் அடைக்கப்படவில்லை.

    தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக கருத்து கூற முடியாமல் பேச்சுரிமையை இழந்து உள்ளோம். எனவே தேவையில்லாமல் நீங்கள் ஏன் அக்சய்குமாரையும், அமிதாப்பச்சனையும் குறை கூறுகிறீர்கள்?

    பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100-ஐ எட்டியது பாஜகவின் சக்சஸ் இதைக் கொண்டாடுவதை விடுத்து காங்கிரஸ் கட்சிக்கு பெருமையைச் சேர்க்கிறார் பிரதமர் மோடி. காங்கிரஸ் ஆட்சியில்தான் இந்தியன் ஆயில், ஓ.என்.ஜி.சி, பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவற்றை கட்டி எழுப்பியது. ஆனால் மோடி அவர்கள் உருவாக்கியதை தனியாருக்கு விற்றுக் கொண்டே அவர்களையே குறைகூறுகிறார்.

    மகாராஷ்ட்ரா பெட்ரோல் பங்க்குகளில் சிவசேனா இளையோர் பிரிவு யுவசேனா, ‘இதுதான் அச்சே தின்னா?’ என்று கேட்டு பேனர் வைத்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
    Published by:Muthukumar
    First published: