அதி விரைவான நகர்மயமாக்கல் மற்றும் பருவநிலை மாற்றத்தால் உயர்ந்து வரும் கடல் நீர் மட்டம் போன்ற காரணங்களால் இந்தியாவில் உள்ள அலையாத்திக் காடுகள் பெரும்பாலும் மிக பெரிய ஆபத்தை எதிர்நோக்கி உள்ளன. கடலோரங்களில் அமைந்துள்ள காடுகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் ஒடிசா மாநிலத்தின் பிடர்கனிகா சதுப்பு நிலங்களில் உள்ள அலையாத்திக் காடுகளை பாதுகாப்பதற்கு மிக நேர்த்தியான நடவடிக்கை ஒன்று கையாளப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி சுஷாந்தா நந்தா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், “பிடர்கனிகா பகுதியில் சிற்றோடைகளில் இருந்து வரும் தண்ணீரை, மீன் முள் போன்ற கால்வாய்களை அமைத்து அலையாத்திக் காடுகளுக்கு திருப்பி விடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை காரணமாக, உப்புத்தன்மை கொண்ட அந்த மண்ணில் அலையாத்திக் காடுகள் நிலைத்து வளருவதற்கான சூழல் உருவாக்கப்படும். மீன் முள் போன்ற அமைப்பு காரணமாக அலையாத்திக் காடுகளின் ஒவ்வொரு மூளை, முடுக்கிலும் தண்ணீர் சென்று அடையும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
வீடியோவில் மீன் முள் போன்ற நீர்ப்பாசன அமைப்பின் வான் பார்வைக் காட்சி இடம்பெற்றுள்ளது. கடலில் உள்ள மீன்களின் முள் போன்ற அமைப்பை மாதிரியாகக் கொண்டு, கடலோர அலையாத்திக் காடுகளை பாதுகாப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது பெரிய அலையாத்திக்காடு
இந்தியா மூன்று திசைகளில் கடல்களால் சூழப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான கடற்கரை ஓரப் பகுதிகளில் அலையாத்திக் காடுகள் இருக்கின்றன. அதில், நாட்டிலேயே இரண்டாவது பெரிய காடுகளைக் கொண்ட பகுதியாக ஒடிஸா மாநிலத்தின் இந்த பிடர்கனிகா பகுதி உள்ளது. இங்குள்ள சதுப்பு நிலத்தில் பல்வேறு வகையான தாவரங்கள் வளர்ந்து வருகின்றன.
Also Read :
லண்டனில் பிரபல நடிகையுடன் டேட்டிங்.. ஐபிஎல் பிதாமகன் லலித் மோடியின் வைரல் ட்வீட்
சர்வதேச அளவில், மிக முக்கியமான சதுப்பு நிலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ள ராம்சர் தளங்களில் ஒன்றாக இந்த அலையாத்திக் காடுகள் உள்ளன.
மீன் முள் உத்தி செயல்படுவது எப்படி
பொதுவாக கடலோரங்களை ஒட்டிய சதுப்பு நிலங்கள் நீர்பாசனங்களுக்கு தடையை ஏற்படுத்தும் பகுதிகளாக அமைந்திருக்கின்றன. அங்கு மீன் முள் போன்ற பாசன கட்டமைப்புகளை ஏற்படுத்துவதால் தண்ணீர் தங்கு தடையின்றி சென்று பாய்வதற்கு உதவியாக இருக்கிறது.
முன்னதாக, ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணா வன சரணாலயத்தில் உள்ள அலையாத்திக் காடுகளை பாதுகாப்பதற்கு இதேபோன்ற உத்தி செயல்படுத்தப்பட்டது. மீன் முள் கால்வாய்களானது கிருஷ்ணா நதி கல்வாய்களுடன் நேரடியாக இணைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, வறண்ட மணல் பகுதிக்கு தண்ணீர் தடையின்றி சென்று சேர்ந்தது. இதனால், அந்த மணலில் உள்ள உப்புத்தன்மை குறைந்து அலையாத்திக் காடுகள் வளருவதற்கான சூழல் உருவாகியது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.