முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி படுகொலைகள் குறித்து பாஜக அமைச்சரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கினார். ராகுல் காந்தி தனது நாடு தழுவிய நடைபயணத்தை ஜனவரி 30ஆம் தேதி காஷ்மீரில் நிறைவு செய்தார்.
நடைபயண நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி, தனது பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜீவ் காந்தியின் படுகொலைகள் குறித்து உருக்கமாக பேசினார். பாட்டி, தந்தையின் படுகொலைகள் தனக்கு தொலைபேசி அழைப்பு மூலம் தகவல் கொடுக்கப்பட்டதை நினைவு கூர்ந்த ராகுல்காந்தி, வன்முறையை தூண்டும் மோடி, அமித்ஷா, பாஜக, ஆர்.எஸ்.எஸ். போன்றோருக்கு அந்த வலி ஒருபோதும் புரியாது என்றும் குறிப்பிட்டார்.
ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு உத்தரக்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக அமைச்சர் கூறிய பதில் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்டில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அங்கு வேளாண்மை, ஊரக வளர்ச்சி ஆகிய துறைகளின் அமைச்சராக கணேஷ் ஜோஷி உள்ளார்.
இவர் ராகுல் காந்தியின் கருத்துக்கு பதில் தெரிவித்து கூறியதாவது, "ராகுல் காந்தியின் அறிவுத்திறனை பார்த்து நான் பரிதாபப்படுகிறேன். தியாகத்தின் அர்த்தம் அவருக்கு புரியவில்லை. சுதந்திரப் போராட்டத்தின் போது பகத் சிங், சாவர்கர், சந்திரசேகர ஆசாத் போன்றோர் செய்தது தான் தியாகம். அவர்கள் தங்களின் சுகபோக வாழ்க்கையையும் இன்னுயிரையும் தியாகம் செய்தனர்.
இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரின் உயிரிழப்பு விபத்துக்கள் ஆகும். விபத்திற்கும் உயிர்தியாகத்திற்கும் வேறுபாடு உள்ளது. உயிர் தியாகம் என்பது காந்தி குடும்பத்தினர் மட்டும் சொந்தம் கொண்டாடக்கூடிய விஷயம் அல்ல. சட்டப் பிரிவு 370ஐ பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீரில் நீக்கியதன் விளைவாகத்தான் ராகுல் காந்தியால் சுமூகமாக நடைபயணம் மேற்கொள்ள முடிந்தது. பிரதமர் மோடி இதை செய்யமால் இருந்திருந்தால் ராகுல் காந்தியால் லால் சவுக் பகுதியில் தேசிய கொடியை ஏற்றி இருக்க முடியாது" என்றார். அமைச்சரின் கருத்துக்கு உத்தரகாண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹரிஷ் ராவத் உள்ளிட்ட முன்னணி காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Indra Gandhi, Rahul gandhi, Rajiv gandhi, Uttarkhand