• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • PNB Fraud Case: தடுப்பூசி கொடுத்து உதவியதற்கு கைமாறு: மெகுல் சோக்ஸியை இந்தியாவிடம் ஒப்படைக்கிறதா டொமினிகா?

PNB Fraud Case: தடுப்பூசி கொடுத்து உதவியதற்கு கைமாறு: மெகுல் சோக்ஸியை இந்தியாவிடம் ஒப்படைக்கிறதா டொமினிகா?

மெகுல் சோக்ஸி

மெகுல் சோக்ஸி

தடுப்பூசிகள் அனுப்பி வைக்கும் இந்திய அரசின் திட்டத்தின் கீழ் டொமினிகாவிற்கு கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு தடுப்பூசிகளை அனுப்பி வைத்தது.

  • Share this:
போலி ஆவனங்களை பயன்படுத்தி பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,500 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பிச் சென்ற மெகுல் சோக்ஸி (வயது 62), ஆண்டிகுவா & பர்புடா எனும் தீவு நாட்டில் தஞ்சம் அடைந்து வாழ்ந்து வந்த நிலையில் அங்கிருந்து கியூபாவிற்கு தப்பிச் செல்லும் வழியில் டொமினிகாவில கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த தேவையான நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேட்டில் முதல் குற்றவாளியான கீதா ஜெம்ஸ் நிறுவனத்தின் தலைவர் நீரவ் மோடியின் உறவினரான மெகுல் சோக்ஸி இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டால், பண மோசடி வழக்குகளில் விசாரணையை எதிர்கொள்ளாமல் இந்தியாவிலிருந்து தப்பிச் சென்றவர்களில் மீண்டும் நாடு கொண்டுவரப்படும் முக்கிய நபராக இருப்பார்.

இந்தியாவிலிருந்து தப்பிச் சென்ற மெகுல் சோக்ஸி கியூபா சென்ற நிலையில் அங்கிருந்து தலைமறைவான பின்னர், கரீபிய தீவான ஆண்டிகுவா & பர்புடா நாட்டில் அவர் இருப்பது கண்டறியப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு முதல் அந்நாட்டின் குடியுரிமையை பெற்று அங்கு வசித்து வரும் நிலையில் அவரை இந்தியாவிற்கு நாடு கடத்துவதற்கான சட்ட நகர்வுகளை இந்தியா மேற்கொண்டு வந்தது.

இந்நிலையில் அவர் மீதான வழக்கில் தீர்ப்பு வரவிருந்த நிலையில் அந்த அழுத்தம் காரணமாக தான் இந்தியாவிற்கு நாடு கடத்தப்படலாம் என்ற அச்சத்தில் அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆண்டிகுவா & பர்புடாவில் தலைமறைவானார். அவருடைய கார், கடற்கரை அருகே கண்டறியப்பட்ட நிலையில் ஆண்டிகுவாவின் விமான நிலையங்கள் வழியாக மெகுல் சோக்ஸி எங்கேனும் சென்றாரா என தேடப்பட்டது. இதன் பின்னர் அவர் கடல் மார்க்கமாக படகுகளில் தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

இது போன்ற சூழலில் ஆண்டிகுவா & பர்புடாவில் இருந்து 100 நாட்டிக்கல் மைல் தொலைவில் உள்ள டொமினிகா நாட்டின் கடல்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்டிருந்ததால் மெகுல் சோக்ஸியை விசாரித்த டொமினிகா காவல்துறையினர் அவர் தேடப்படும் குற்றவாளி என்பதை கண்டறிந்தனர்.

மெகுல் சோக்ஸி கடலில் சில ஆவணங்களை தூக்கி எறிந்ததால், அதனை ஸ்கூபா டைவர்கள் உதவியுடன் தேடும் முயற்சியிலும் டொமினிகா காவல்துறையினர் ஈடுபட்டனர். இந்த நிலையில் மெகுல் சோக்ஸி சட்டவிரோதமான முறையில் டொமிகாவிற்கு தப்பிச் சென்றதற்கு ஆண்டிகுவா பிரதமர் கேஸ்டன் பிரவுனி கண்டனம் தெரிவித்துள்ளார். இப்படி சென்றதன் மூலம் வரலாற்று தவறை மெகுல் சோக்ஸி செய்துவிட்டதாகவும், அவரை மீண்டும் ஆண்டிகுவாவிற்கு அனுப்ப வேண்டாம், இந்தியாவில் அவர் மீது தீவிரமான வழக்குகள் இருப்பதால் மெகுல் சோக்ஸியை இந்தியாவிடம் ஒப்படைத்துவிடுமாறும் பிரவுனி, டொமினிகா அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.

Read More:   நாய் குட்டியை ஹைட்ரஜன் பலூனில் கட்டி பறக்கவிட்ட யூடியூபர் - விபரீத முயற்சியால் போலீசில் சிக்கினார்!

இருப்பினும் மெகுல் சோக்ஸி ஆண்டிகுவாவின் குடியுரிமை பெற்றிருப்பதால் அவரை ஆண்டிகுவாவிடம் மட்டும் தான் ஒப்படைக்க வேண்டும் எனவும் மெகுல் சோக்ஸி வேண்டும் என்றே டொமினிகா சென்றதை போல தோன்றவில்லை என்றும் மெகுல் சோக்ஸியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளுக்கு நல்லெண்ண அடிப்படையில் கொரோனா தடுப்பூசிகள் அனுப்பி வைக்கும் இந்திய அரசின் திட்டத்தின் கீழ் டொமினிகாவிற்கு கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு தடுப்பூசிகளை அனுப்பி வைத்தது. அந்த உதவிக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடிக்கு, டொமினிகா பிரதமர் ரூஸ்வெல்ட் அனுப்பிய கடிதத்தில், இந்தியாவின் அன்பிற்கு மிகுந்த நன்றி, இந்த உதவியின் மூலம் ஏப்ரல் மாதத்திற்குள் டொமினிகாவின் 35,000 குடிமக்களுக்கும் தடுப்பூசி செலுத்திவிடுவோம். இந்த உதவியை என்றும் மறக்க மாட்டோம் என தெரிவித்திருந்தார்.

Read More:    பச்சை நிறத்தில் மாறிய கங்கை நதி: ஆபத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

இந்நிலையில் இந்தியா தடுப்பூசி அளித்து உதவியதற்கு தற்போது கைமேல் பலன் கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆண்டிகுவாவும் இந்தியாவிற்கு ஆதரவாக நிலைப்பாடு எடுத்திருப்பதால் டொமினிகா நாடு, மெகுல் சோக்ஸியை இந்தியாவிற்கு தடை ஏதும் இல்லாமல் அனுப்பி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீரவ் மோடியை இந்தியாவிற்கு நாடு கடத்த தடை ஏதும் இல்லை என்று இங்கிலாந்து நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்த நிலையில் தற்போது மெகுல் சோக்ஸியின் வருகை பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேட்டு வழக்கை துரிதப்படுத்தும் என இந்திய புலனாய்வு அமைப்புகளுக்கு நம்பிக்கையை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: