Corona Crisis | இந்தியாவில் முதல் முறையாக ஒரு நாள் கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை கடந்தது!

Corona Crisis | இந்தியாவில் முதல் முறையாக ஒரு நாள் கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை கடந்தது!

கோப்புப் படம்

நாடு முழுவதும் நோய்த் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் 32,68,710 ஆக உயர்ந்துள்ளது.

  • Share this:
இந்தியாவில் இதுவரை இல்லாத உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை வீரியமுடன் பரவி வருகிறது. இதன் காரணமாக கடந்த 10 நாட்களாக தினசரி கொரோனாவால் பாதிப்புக்கு ஆளாவோரின் எண்ணிக்கை தொடர்ந்து 3 லட்சமாக பதிவாகி வந்தது. அதே போல உயிரிழப்போரின் எண்ணிக்கையும் தினந்தோறும் சாதனை அளவாக 3,600க்கும் மேல் பதிவாகி வந்தது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவின் கொரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 4,01,993 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதே போல 3523 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதே காலகட்டத்தில் 2,99,988 பேர் சிகிச்சை முடிந்து பூரண குணநலன் பெற்று வீடு திரும்பியிருக்கின்றன.

இதனையடுத்து இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.91 கோடியாக அதிகரித்துள்ளது. இதுவரை சிகிச்சை முடிந்து 1,56,84,406 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கின்றனர். இந்தியாவில் மொத்தமாக கொரோனா பலி எண்ணிக்கை 2,11,853 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் நோய்த் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் 32,68,710 ஆக உயர்ந்துள்ளது.

அதே நேரத்தில் கொரோனா தொற்றுக்காக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 15,49,89,635 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 62,919 பேரும், கர்நாடகாவில் 48,296 பேருக்கும், கேரளாவில் 38,607 பேருக்கும், டெல்லியில் 27,047 பேரும், தமிழகத்தில் 18,692 பேருக்கும், ராஜஸ்தானில் 17,155 பேருக்கும், குஜராத்தில் 14,605 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் அடுத்த வாரத்தில் கொரோனா பாதிப்பு உச்சம் தொடலாம்: நிபுணர் குழு எச்சரிக்கை!  

 

கொரோனா 2வது அலை குறித்து மத்திய அரசு நியமித்துள்ள நிபுணர் குழு ஒன்றின் தலைவர் வித்யாசாகர் கூறுகையில், “எங்கள் நம்பிக்கை என்னவென்றால், அடுத்த வாரத்திற்குள், நாடு முழுவதும் தினசரி புதிய பாதிப்புகள் உச்சம் அடையலாம்” என்றார்.
Published by:Arun
First published: