Home /News /national /

தொலைதூர ரயில்களில் சிசிடிவி கேமராக்களை நிறுவ இந்திய ரயில்வே துறை திட்டம்!

தொலைதூர ரயில்களில் சிசிடிவி கேமராக்களை நிறுவ இந்திய ரயில்வே துறை திட்டம்!

மாதிரி படம்

மாதிரி படம்

மத்திய ரயில்வே துறையின் முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி சிவாஜி சுதாகர் கூறுகையில் முதல்கட்டமாக எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் உள்ளூர் ரயில்களின் என்ஜின்களில் கேமராக்கள் பொருத்தப்படுகின்றன என்று கூறினார்.

தொலைதூர ரயில்களிலும், மும்பையில் ஓடும் உள்ளூர் ரயில்களிலும் பெண்களுக்கான பெட்டிகளை அறிமுகம் செய்த நிலையில், தற்போது ரயில் ஓட்டுநர்கள் மீது சிசிடிவி கேமராக்கள் மூலமாக ஒரு கண் வைக்க இந்திய ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே லோகமோட்டிவ் என்ஜின்கள் மற்றும் ரயில்களில் சிசிடிவி கேமராக்களை அமைக்கும் பணியை இந்திய ரயில்வே தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக, தொலைதூர ரயில்களில் உள்ள என்ஜின்களில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படுகின்றன. இதேபோன்று, உள்ளூர் ரயில்களில் மோட்டார் மேன் (ஓட்டுநர்) அறையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.

ஒட்டுமொத்த ரயில் பயணத்தின் போதும் ஓட்டுனர் மற்றும் மோட்டார் மேன் ஆகியோரின் செயல்பாடுகளை கண்காணிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அதேசமயம், விபத்து ஏற்பட்டால் அது குறித்து தெரிந்து கொள்ளவும் வசதியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

மத்திய ரயில்வே துறையின் முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி சிவாஜி சுதாகர் இது குறித்து கூறுகையில், “தொலைதூர ரயில்களில் உள்ள எஞ்சின்கள் மற்றும் உள்ளூர் ரயில்களில் உள்ள மோட்டார் மேன் அறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் உள்ளூர் ரயில்களின் என்ஜின்களில் கேமராக்கள் பொருத்தப்படுகின்றன’’ என்று கூறினார்.

ரயில் ஓட்டுனர்கள் ரயில்களை இயக்கும்போது, செல்போனில் பேசுவதை தடுக்கும் வகையில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.

மத்திய ரயில்வே மண்டலத்தில் 30 தொலைதூர மின்சார ரயில்களில் ஏற்கனவே கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும், எஞ்சியுள்ள ரயில்களிலும் கேமராக்களை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மிகுந்த உயர் தரத்திலான இந்த கேமராக்கள் மூலமாக வீடியோ மற்றும் ஆடியோ ஆகிய இரண்டும் பதிவு செய்யப்படும்.

மும்பையில் உள்ள உள்ளூர் ரயில்களின் முகப்பில் சிசிடிவி கேமராக்களை நிறுவுவதன் மூலமாக விபத்துகள் குறித்து கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ரயில் ஓட்டுனர்கள் பொதுவாக பணியின் போது செல்போனில் பேசும் பழக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த 2011ஆம் ஆண்டில் மின்சார ரயிலும், பேசஞ்சர் ரயிலும் சென்னையில் மோதி கொண்டன. அந்த விபத்தில் 15 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதில், பாசஞ்சர் ரயிலில் மோட்டார் மேன் செல்போனில் பேசியதே விபத்துக்கு காரணம் என்பது தெரிய வந்து, அவர் கைது செய்யப்பட்டார்.

Also read... பேஸ்புக் சாட்களை ஸ்கிரீன் ஷாட் எடுக்க வேண்டாம் - எச்சரிக்கும் மார்க்!

இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளின்படி அனைத்து ரயில் ஓட்டுனர்கள், துணை ஓட்டுனர்கள் மற்றும் மோட்டார் மேன் ஆகியோரின் செல்போன்களுக்கு வரும் அழைப்புகள் அல்லது மெசேஜ் ஆகியவை குறித்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணியின் போது அவர்கள் செல்போன்களை பயன்படுத்துகிறார்களா என்பதை அறிந்து கொள்ள இது உதவிகரமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஓட்டுனர்கள் செல்போன்களைப் பயன்படுத்துவதை தடுக்க மூத்த ரயில்வே அதிகாரிகள் அவ்வப்போது திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: CCTV, Indian Railways

அடுத்த செய்தி