ஆசியாவிலேயே மிகப் பெரிய ரயில்வே நிர்வாகங்களில் ஒன்றாக இருக்கும் இந்தியன் ரயில்வே கடந்த சில மாதங்களுக்கு முந்திய நிலவரப்படி சுமார் 67,956 கி.மீ நீளமுள்ள ரயில் பாதையைக் கொண்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளிலிருந்து தினமும் பல லட்சக்கணக்கான பயணிகள் இந்தியன் ரயில்வேவின் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் இந்தியன் ரயில்வேவின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.95,486.58 கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டில் இதே காலத்தில் கிடைத்த வருவாயை விட ரூ. 26,271.29 கோடி அதிகம். இதன் மூலம் இந்தியன் ரயில்வே வருவாய் சுமார் 38% அதிகரித்துள்ளது. இது தொடர்பாக சமீபத்தில் அறிக்கையை இந்தியன் ரயில்வே வெளியிட்டுள்ளது.
அதிகரித்த தேவைக்கு மத்தியில் நீண்ட தூர விரைவு ரயில்களுக்கான ஃப்ளெக்ஸி-ஃபேர் சிஸ்டம், மூலம் கடந்த ஏப்ரல்- ஆகஸ்ட் மாதங்களில் பயணிகள் போக்குவரத்தின் மூலம் ரூ. 25,277 கோடி வருவாயை ஈட்டி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருவாய் இது கடந்த ஆண்டின் இதே காலத்தை விட 116% அதிகமாகும். முன்பதிவு மற்றும் சாதாரண என்ற இரு பிரிவுகளிலும் பயணிகளின் போக்குவரத்து கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது. நீண்ட தூர முன்பதிவு செய்யப்பட்ட மெயில் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வளர்ச்சி, பயணிகள் மற்றும் புறநகர் ரயில்களிலிருந்ததை விட அதிகமாக இருப்பதாகவும் ரயில்வே அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலக்கரி, சிமெண்ட், உணவு தானியங்கள் மற்றும் எஃகு போன்ற பல மொத்தப் பொருட்களுக்கு தற்போதும் ரயில்வே முக்கிய போக்குவரத்து முறையாகத் தொடர்கிறது . இந்திய ரயில்வேயின் பார்சல் பிரிவில் வலுவான வளர்ச்சியால், அந்த பிரிவில் வருவாய் ரூ.2,437.42 கோடியாக உள்ளதாகவும், இது கடந்த ஆண்டின் இதே காலத்திலிருந்ததை விட சுமார் ரூ.811.82 கோடி (50%) அதிகம் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதே போல இந்த ஆண்டு ஆகஸ்ட் இறுதி வரை சரக்கு வருவாய் (Goods revenue) ரூ.10,780.03 கோடி (20%) அதிகரித்து ரூ.65,505.02 கோடியாக உள்ளது. இந்த வருவாய் அதிகரிப்பிற்கு உணவு தானியங்கள், உரங்கள், சிமெண்ட், மினரல் ஆயில், கன்டெயினர் டிராஃபிக் மற்றும் இதர பொருட்களின் பிரிவுகள் இந்த வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பை அளித்துள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இயல்பான வணிக செயல்பாடுகளைத் தவிர இதர பலதரப்பட்ட வருமானம் (Sundry income) எனப்படும் பிரிவிலிருந்து பெறப்பட்டுள்ள வருவாய் அளவு ரூ.2,267.60 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டில் இதே காலத்தில் பெறப்பட்ட வருவாயை விட இது சுமார் ரூ.1,105 கோடி (95%) அதிகம் ஆகும். கடந்த நிதியாண்டில் (2021-22) ரயில்வேவின் மொத்த வருவாய் ரூ.1,91,278.29 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே ரயில்வே சரக்கு போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி என்பது ஜிஎஸ்டி இ-வே பில்கள் போன்ற போக்குவரத்து தொடர்பான வேறு சில பொருளாதார நடவடிக்கைகளுடன் தொடர்புடையது. மாநிலங்களுக்கு இடையேயான சரக்குகளின் இயக்கத்திற்காக வணிகங்களால் உருவாக்கப்பட்ட இ-வே பில்கள் ஆகஸ்ட் மாதத்தில் 78.21 மில்லியனை தொட்டதும் குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Indian Railways, Train, Train ticket