ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள ரயில் நிலையத்திற்கான மறு-மேம்பாட்டு திட்டத்திற்கு ஒப்பந்தம் வழங்கும் நடவடிக்கைகளை இந்திய ரயில்வே துறை நிறைவு செய்துள்ளது. இதுதொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி யாதவ் கூறுகையில், “உலகத் தரத்தில் திருப்பதி ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கான அனைத்து ஒப்பந்தங்களும் கொடுக்கப்பட்டுள்ளன’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, திருப்பதி ரயில் நிலையத்தை மறு மேம்பாடு செய்வதற்கான திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டில் அறிவித்தது. திட்டப் பணிகளை 2023ஆம் ஆண்டிற்குள் நிறைவு செய்யவும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட சவால்கள் காரணமாக இந்தத் திட்டம் தாமதமாகியது.
மத்திய அரசுத் துறை சார்பில் திட்டம் செயலாக்கம் :
ரயில்வே துறையில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் நிலங்களை, தனியார் நிறுவனங்களுடன் இணைந்து மேம்படுத்தும் அமைப்பாக ரயில் நில மேம்பாட்டு ஆணையம் (ஆர்.எல்.டி.ஏ.) என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. அந்த ஆர்எல்டிஏ அமைப்பு தான் தற்போது திருப்பதி ரயில் நிலையத்தை மறு மேம்பாடு செய்வதற்கான ஒப்பந்தங்களை பெற்றுள்ளது. பொதுத்துறை மற்றும் தனியார் துறை கூட்டு பங்களிப்பு (பிபிபி) மாடல் அடிப்படையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக பயணிகள் வந்து செல்லும் ரயில் நிலையம் :
திருப்பதி ஏழுமலையான் கோவில் இருக்கும் காரணத்தால், இங்குள்ள ரயில் நிலையத்திற்கு ஆண்டு முழுவதுமே பயணிகள் ஏராளமான அளவில் வந்து செல்கின்றனர். ஆகவே திருப்பதி மாநகருக்கு வரும் பயணிகள் அல்லது இங்கிருந்து வேறு நகரங்களுக்கு புறப்படும் பயணிகள் என அனைவருக்குமே உலகத் தரம் வாய்ந்த வசதிகளை ரயில் நிலையத்தில் செய்து கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு கருதுகிறது.

திருப்பதி ரயில் நிலையம் மாடல்
விமான நிலைய மாடலில் மேம்பாடு :
மறு மேம்பாடு செய்யப்படும் திருப்பதி ரயில் நிலையத்தில் திறந்தவெளி பயணிகள் காத்திருப்பு அரங்கு, விமான நிலையத்தைப் போல லைட்டிங் வசதி, பணம் செலுத்தி காத்திருப்பதற்கான குளிரூட்டப்பட்ட பயணிகள் அறைகள் மற்றும் இதர வசதிகள் செய்து கொடுக்கப்பட உள்ளன.
தமிழகத்திலும் அதேபோன்ற திட்டங்கள்
தமிழகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 26ஆம் தேதி வந்தபோது இதேபோன்று ரயில் நிலைய மறு மேம்பாட்டு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதன்படி சென்னை எழும்பூர், ராமேஸ்வரம், மதுரை, காட்பாடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய ரயில் நிலையங்கள் மறு மேம்பாடு செய்யப்பட உள்ளன.
Also see... பேட்டரி இன்றி Harper ZXSeries-Iஸ்கூட்டரை அறிமுகம் செய்த Greta Electric
பயணிகளுக்கு அதிநவீன வசதிகளை வழங்கும் இந்தத் திட்டங்களை ரூ.1,800 கோடி செலவில் செயல்படுத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோன்று மதுரை - தேனி இடையிலான 75 கி.மீ. தொலைவுக்கு ரூ.500 கோடி செலவில் அமைக்கப்பட்ட புதிய அகல ரயில் பாதையை மோடி தொடங்கி வைத்தார். தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான 30 கி.மீ. தொலைவுக்கு 3ஆவது ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.