கடந்த 6 ஆண்டுகளில் குரூப் சி மற்றும் குரூப் டி ஆகிய பிரிவுகளில் உள்ள 72,000 பணியிடங்களை இந்திய ரயில்வே துறை ரத்து செய்துள்ளது. பியூன், வெயிட்டர், தோட்டப் பராமரிப்பாளர், தூய்மைப் பணியாளர் மற்றும் தொடக்கநிலைப் பள்ளி ஆசிரியர் உள்ளிட்டவை இந்தப் பிரிவுகளில் வரும் பணியிடங்கள் ஆகும்.
நாட்டில் கடந்த 2015 - 2016 மற்றும் 2020 - 2021 ஆகிய ஆண்டுகளில் 16 ரயில்வே மண்டலங்கள் சார்பில் 56,888 பணியிடங்கள் சரண்டர் செய்யப்பட்டுள்ளன. வடக்கு கோட்ட ரயில்வே சார்பில் 9,000 பணியிடங்களும், தெற்கு ரயில்வே சார்பில் 7,524 பணியிடங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோல கிழக்கு கோட்ட ரயில்வே சார்பில் 5,700 பணியிடங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
மொத்தமுள்ள 16 மண்டலங்களில் 81,000 பணியிடங்களை ரத்து செய்வதற்கான பரிந்துரை முன்வைக்கப்பட்டதாகவும், அதில் தற்போது வரை 56,888 பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றும் அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது ஏறத்தாழ 15,495 பணியிடங்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
தொழில்நுட்ப உலகில் தேவையற்றதாக மாறியதால் ரத்து : புதிய தொழில்நுட்ப உலகில், குரூப் சி மற்றும் குரூப் டி பிரிவு பணியிடங்கள் பல தேவையற்ற ஒன்றாக மாறிவிட்ட சூழலில் அவை ரத்து செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் இந்தப் பணியிடங்களை நிரப்ப வேண்டாம் என்று ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. எனினும், தற்போது குரூப் சி மற்றும் குரூப் டி பிரிவுகளில் பணியாற்றும் ரயில்வே ஊழியர்கள் வேறு பணிகளுக்கு மாற்றம் செய்யப்பட இருக்கின்றனர்.
Also Read : IRCTC ரயில் டிக்கெட் ஆன்லைன் முன்பதிவில் அதிரடி மாற்றம்; புதிய புக்கிங் முறை இதோ!
விரிவான ஆய்வுக்குப் பிறகு எடுத்த முடிவு : பணியிடங்களை ரத்து செய்வதற்கு முன்பாக ரயில்வே துறை சார்பில் விரிவான அளவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அனைத்து மண்டலங்களிலும் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் போது, எந்தப் பலனும் இல்லாத பணியிடங்களை ரத்து செய்யலாமா என்பது குறித்து ஆராயப்பட்டது. இந்தப் பணியிடங்களை ரத்து செய்வதன் மூலமாக, பொருளாதார ரீதியாக ரயில்வே துறைக்கு பெரிய சேமிப்பு கிடைக்கும் என்று கருதப்பட்டது.
நாட்டிலேயே பெரிய நிறுவனம் ரயில்வே துறை :
அதிகபட்ச பணியாளர்களுக்கு வேலை வழங்குவதில் நாட்டிலேயே பெரிய நிறுவனமாக ரயில்வே துறை இருக்கிறது. எனினும், ஒப்புதல் அளிக்கப்பட்ட பல பணியிடங்களுக்கு, வெளி நிறுவனங்கள் மூலமாக ஒப்பந்தப் பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரயில்வே துறைக்கு குரூப் ஏ மற்றும் குரூப் பி ஆகிய பிரிவுகளில் கெஸட் நிலை அதிகாரிகளும், குரூப் சி மற்றும் குரூப் டி ஆகிய பிரிவுகளில் கெஸட் நிலை அல்லாத பணியாளர்களும் நியமிக்கப்படுகின்றனர்.
குறிப்பாக ஸ்டேஷன் மாஸ்டர், கிளர்க், டிக்கெட் கலெக்டர் போன்ற தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் அல்லாத பணியிடங்களுக்கு குரூப் சி பிரிவிலும், பியூன், உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கு குரூப் டி பிரிவிலும் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.