ஹோம் /நியூஸ் /இந்தியா /

உலக அரங்கில் இந்திய பொருளாதாரம் பிரகாசமான இடத்தில் உள்ளது.. பிரதமர் மோடி பேச்சு

உலக அரங்கில் இந்திய பொருளாதாரம் பிரகாசமான இடத்தில் உள்ளது.. பிரதமர் மோடி பேச்சு

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவிற்கு முன்னணி இடம் கிடைத்திருக்கிறது என சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Delhi, India

மத்தியப் பிரதேசத்தில் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தாண்டில் அங்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தின் இந்தூரில் 7ஆவது சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று தொடங்கியது. இதை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். பின்னர் இந்தியாவின் பொருளாதாரா நிலை குறித்தும், சர்வதேச அமைப்புகள் இந்தியா மீது வைத்துள்ள நம்பிக்கை குறித்து பேசினார்.

பிரதமர் மோடி தனது உரையில் கூறியதாவது, "உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவிற்கு முன்னணி இடம் கிடைத்திருக்கிறது. மற்ற நாடுகளைவிட சர்வதேச அளவில் இந்தியா சிறப்பான இடத்தைப் பிடித்திருப்பதாக உலக வங்கி தெரிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஜி-20 நாடுகளில் இடம் பெற்றுள்ள அதிவேக வளர்ச்சி அடையும் பொருளாதார நாடுகளில் இந்தியாவும் இடம் பெறும் என பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு(OECD) தெரிவித்திருக்கிறது.

அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளில், உலகின் மிகப்பெரிய 3ஆவது பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இந்தியா மாறும் என மோர்கன் ஸ்டான்லி என்ற அமெரிக்க பன்னாட்டு முதலீட்டு வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனம் தெரிவித்திருக்கிறது. நடப்பு தசாப்தம் மட்டுமல்லாமல், இந்த நூற்றாண்டே இந்தியாவிற்கானது என எம்சிகின்சே நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கூறியிருக்கிறார். நிறுவனங்கள் மற்றும் அதன் ஆதரவு குரல்களும், உலகப் பொருளாதாரம் இந்தியா மீது அபரிதமான நம்பிக்கைக் கொண்டிருப்பதை வெளிப்படுத்துகிறது. இதே நிலைப்பாட்டை சர்வதேச முதலீட்டாளர்களும் கொண்டிருக்கின்றனர்.

முன்னணி சர்வதேச வங்கி நடத்திய ஆய்வில், சர்வதேச முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய விரும்பும் நாடாக இந்தியா திகழ்கிறது. அந்நிய நேரடி முதலீட்டில் இந்தியா இன்று சர்வதேச சாதனைகளைப் படைத்து வருகிறது என்பதை இங்கு வந்துள்ள முதலீட்டாளர்களின் எண்ணிக்கை பிரதிபலிக்கிறது. 2014ஆம் ஆண்டு முதல் தொடர் சீர்திருத்த நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டு வருகிறது. கடந்த 8 ஆண்டுகளில் முதலீட்டுக்கான பல்வேறு தடைகள் நீக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: நடுவானில் பயணிக்கு மாரடைப்பு...5 மணி நேர போராட்டம்..உயிர் காத்த இந்திய மருத்துவருக்கு குவியும் பாராட்டு

கடந்த 8 ஆண்டுகளில், விமான நிலையங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதோடு, தேசிய நெடுஞ்சாலைப் பணிகளின் வேகம் இரண்டு மடங்காக உயர்ந்திருக்கிறது. இதே போல் இந்தியாவில் உள்ள துறைமுகங்களில் கையிருப்பு வசதியும் அபரிமித வளர்ச்சிக் கண்டுள்ளன. சுகாதாரம், வேளாண்மை, ஊட்டச்சத்து, திறன் மேம்பாடு மற்றும் புத்தாக்க முயற்சிகளில், இந்தியாவுடன் இணைந்து சர்வதேச அளவிலும் விநியோகச் சங்கிலியை உருவாக்கவதே இலக்கு". இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

First published:

Tags: Indian economy, PM Modi