• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் 500 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் தயாரிக்கப்படும் - பிரதமர் மோடி

அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் 500 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் தயாரிக்கப்படும் - பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் 500 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் தயாரிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

  • Share this:
    இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளை உள்ளடக்கிய ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு, இத்தாலி தலைநகர் ரோமில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. உலகளாவிய பொருளாதாரம், சுகாதாரம் எனும் தலைப்பில் நடைபெற்ற அமர்வில் பேசிய பிரதமர் மோடி, ஒரே பூமி ஒரே சுகாதாரம் என்ற பார்வை, கொரோனா மட்டுமின்றி எதிர்காலத்தில் நேரிடும் சுகாதார பிரச்னைகளை எதிர்கொள்ள உதவும் என்றார்.

    கொரோனாவை எதிர்கொள்ள உலக நாடுகளுக்கு இடையே கூட்டு அணுகுமுறை அவசியம் எனவும் மோடி குறிப்பிட்டார். சவால்கள் நிறைந்த நோய்த் தொற்று காலத்தில், விநியோக சங்கிலியின் நம்பிக்கைக்கு உரிய கூட்டாளியாக இந்தியா செயல்பட்டு, 150 நாடுகளுக்கு மருந்துகள் உள்ளிட்டவற்றை விநியோகித்ததாக பெருமிதம் தெரிவித்தார்.

    உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள கோவாக்சின் தடுப்பூசிக்கு, உலக சுகாதார அமைப்பின் சர்வதேச பயன்பாட்டிற்கான அனுமதி அளித்தால், மற்ற நாடுகளுக்கும் தடுப்பூசியை விநியோகிக்க தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் 500 கோடி தடுப்பூசிகள் தயாரிக்கப்படும் எனவும், வளரும் நாடுகளில் உள்ள தடுப்பூசி ஏற்றத்தாழ்வுகளை, குறைப்பதற்கான தங்களின் பங்களிப்பு இது என்றார். சர்வதேச பயணங்களை எளிமையாக்க நாடுகள் பரஸ்பரம் தடுப்பூசி சான்றிதழ்களை அங்கீகரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

    உலகளாவிய நிதி கட்டமைப்பை இன்னும் நியாயமாக மாற்றுவதற்கு, குறைந்தபட்ச கார்பரேட் வரியை 15 சதவிகிதமாக கொண்டு வரும், ஜி20 நாடுகளின் முடிவை பிரதமர் மோடி வரவேற்றுள்ளார்.

    ரோமா மாநாட்டு மையத்தில் நடைபெற்ற மாநாட்டிற்கு இடையே ஜி20 நாடுகளின் தலைவர்கள் கூட்டாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அவர்களுடன் பிரதமர் மோடியும் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது உலக தலைவர்களுடன் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட முன்கள பணியாளர்கள் ஒன்றாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: