நாடு முழுவதும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கும் ஜூலை முதல் தடை விதிக்கப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது.
மக்காத தன்மை கொண்ட நெகிழியின் பயன்பாட்டால் உலக அளவில் சுற்றுச்சூழலுக்கும், உயிரினங்களுக்கும், முக்கியமாக கடல் வாழ் உயிரினங்களுக்கும் ஆபத்துகள் பெருகிக்கொண்டே இருக்கின்றன. இதை சரி செய்யவேண்டிய அவசர நிலையில் உலக நாடுகள் இயங்கி வருகிறது.
இந்தியாவில் 2009 ஆம் ஆண்டு முதன் முறையாக ஹிமாலச்சப் பிரதேசத்தில் நெகிழிப் பொருட்கள் பயன்பாடு தடை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ராஜஸ்தான், ஜம்மு & காஷ்மீர், உத்தரபிரதேசம், மஹாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்கள் முழு தடை விதித்தன. கோவா, குஜராத், கேரளா, ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நெகிழி பயன்பாட்டிற்கு பகுதியளவு தடை விதிக்கப்பட்டன. கடந்த 2020 ஆம் ஆண்டு அண்டைய மாநிலமான கேரளா நெகிழிகளுக்குத் தடை விதித்தது. 2019-ம் ஆண்டு தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தும் நெகிழிப் பைகள் மற்றும் பாலித்தீன் கவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஜூலை 5ம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பஞ்சாப் அரசும் அண்மையில் தடை விதித்தது. இந்நிலையில், குறைந்த பயன்பாடு மற்றும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு, விநியோகம், விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றை ஜூலை 1 முதல் நாடு முழுவதும் தடை செய்யப்படும் என மத்தியசுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: தம்பியின் கோபத்தை போக்க 434 மீட்டர் நீளத்துக்கு கடிதம் எழுதிய அக்கா
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கை கைவிடுவதற்கு அரசு போதிய அவகாசம் அளித்துள்ளது என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்தார்.
அகில இந்திய பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் இயக்குநர் ஜெனரல் தீபக் பல்லானி கூறுகையில், பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக மேலாண்மை செய்வதற்கான நடவடிக்கையை முடுக்கிவிடுவதில் கவனம் செலுத்த வேண்டும். "நாங்களும் தூய்மை இந்தியாவை விரும்புகிறோம், மாற்றத்திற்கு தயாராக இருக்கிறோம். ஆனால் பிரச்சனையின் மூலமான பிளாஸ்டிக் கழிவுகள் குறித்து ஏன் கவனிக்கவில்லை. மூல அளவில் கழிவு பிரித்தெடுத்தலை மேம்படுத்த வேண்டும், மேலும் நமது மறுசுழற்சி உள்கட்டமைப்பை அதிகரிக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.