நாடு முழுவதும் நிலுவையில் உள்ள வீட்டுவசதித் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு வழங்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதேபோல, ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில், 50 ஆயிரம் கோடி ரூபாய் சலுகைகளையும் மத்திய அமைச்சர் அறிவித்தார்.
பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மூன்றாவது முறையாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில், விற்பனை பொருட்கள் ஏற்றுமதி திட்டத்துக்கு மாற்றாக ஏற்றுமதி பொருட்களுக்கான வரிக் கழிவு என்ற புதிய திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக தெரிவித்தார். அடுத்த ஆண்டு ஜனவரி ஒன்று முதல் அமல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தால், மத்திய அரசுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
ஏற்றுமதிப் பொருட்களுக்கான வரிக் கழிவு என்ற புதிய திட்டம், ஜனவரி 1, 2020 முதல் அமல்படுத்தப்படும். இது ஜவுளி மற்றும் பிற வணிகம் தொடர்பான பொருட்கள் ஏற்றுமதியாளர்களுக்கு, ஏற்கனவே அனைத்து வழிகளிலும் பெறப்படும் சலுகைகளை விட, கூடுதல் சலுகைகளை அளிக்கும். இந்தத் திட்டத்தால், அரசுக்கு ரூ.50,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.)
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான சான்றிதழ்களை எளிதிலும், குறைந்த செலவிலும் பெறுவதற்காக சோதனை மற்றும் சான்றிதழ் மையத்தை ஏற்படுத்த மத்திய அரசு முடிவுசெய்துள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் கூறினார்.
கூடுதலாக செலுத்தப்பட்ட ஜிஎஸ்டி-யை திருப்பி வழங்குவதற்காக முற்றிலும் மின்னணு முறையிலான வழிமுறையை, இந்த மாத இறுதியில் அமல்படுத்த உள்ளதாக அவர் கூறினார்.
ஏற்றுமதி கடன் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், அதிக காப்பீட்டுத் தொகைகளை வங்கிகள் வழங்கும் என்று அவர் கூறினார்.
முன்னுரிமை துறைகளின் ஏற்றுமதி கடனுக்காக கூடுதலாக 36 ஆயிரம் கோடி ரூபாய் முதல் 68 ஆயிரம் கோடி ரூபாய் வரை வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் கூறினார்.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல், துபாயில் இருப்பது போன்று மெகா ஷாப்பிங் திருவிழாக்கள் விற்பனை திருவிழாக்களை ஆண்டுதோறும் நடத்த உள்ளதாக தெரிவித்தார்.
நவரத்தினங்கள் மற்றும் நகைகள், கைவினைப் பொருட்கள், ஜவுளி, தோல் பொருட்கள் என்ற அடிப்படையில் நான்கு விதமாக மெகா ஷாப்பிங் திருவிழாக்கள் நடைபெறும் என்றும் , அப்போது, வீட்டுவசதி நிதி நிறுவனங்களுக்கு கடன் வழங்குவது மற்றும் ரிசர்வ் வங்கியின் வட்டிக் குறைப்பு அடிப்படையில் கடனுக்கான வட்டிவிகிதத்தை குறைப்பது குறித்து பொதுத் துறை வங்கிகளின் தலைவர்களுடன் வரும் 19-ம் தேதி ஆலோசனை நடத்த இருப்பதாக அமைச்சர் கூறினார்
குறைந்த மற்றும் நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கான வீட்டுவசதித் திட்டங்களை விரைந்து நிறைவேற்றுவதற்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு வழங்கும் என்று அவர் கூறினார்.
இந்தத் திட்டத்தின் மூலம், தேசிய சட்டத் தீர்ப்பாய வழக்குகளுக்கு உட்படாத மூன்றரை லட்சம் கட்டுமானதாரர்கள் பயனடைவார்கள் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
வீட்டுவசதி திட்டங்களுக்கு கடைசி நேர நிதி தேவையை நிறைவேற்றும் வகையில், வழக்குகளுக்கு உட்படாத திட்டங்களுக்கு குறைந்த விலையிலான, நடுத்தர தர மக்களுக்கான சிறப்பு நிதி திட்டம் கொண்டுவரப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.10,000 கோடி வழங்கும். அதே அளவு தொகையை வெளி முதலீட்டாளர்கள் வழங்குவார்கள்.
வீட்டுவசதித் திட்டத்தின்கீழ், கூடுதல் கடன் வழங்குவதற்காக வீட்டுவசதி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நிதி 20 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து 30 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளார்.
Published by:Sankar
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.