இலங்கையில் கடந்த சில மாதங்களாக நீடித்து வரும் பொருளாதார நெருக்கடி உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. பால் பவுடர், அரிசி, பெட்ரோல், டீசல் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை பன் மடங்கு அதிகரித்துள்ளதோடு மட்டுமல்லாமல், அவற்றுக்கு தட்டுப்பாடும் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில், இலங்கைக்கு உதவி செய்ய இந்திய அரசு முன்வந்துள்ளது. அதன்படி இந்திய வியாபாரிகள் அந்நாட்டிற்கு 40,000 டன் அரிசியை அனுப்பி வைக்கும் பணிகளை தொடங்கியுள்ளனர்.
சுமார் 22 மில்லியன் மக்கள் தொகையை கொண்டுள்ள இலங்கையில், அந்நிய செலவாணி கையிருப்பு 70 சதவீதத்திற்கும் மேல் குறைந்ததால் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால், சர்வதேச நாடுகளின் உதவியை இலங்கை நாடியுள்ளது. இலங்கையில் தற்போது பண்டிகைக் காலம் நெருங்கியுள்ள நிலையில், அதற்கான தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு அரிசி அனுப்பி வைக்கப்படுகிறது.
இலங்கையில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதேபோன்று, சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. உணவுப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், அரசை எதிர்த்து மக்கள் போராட தொடங்கியுள்ளனர். இத்தகைய சூழலில், சர்வதேச நிதி அமைப்பின் உதவியை இலங்கை நாடியுள்ளது. குறிப்பாக, வெளிநாட்டுக் கடன்களை இலங்கை அரசு திருப்பிச் செலுத்தும் திறன் குறைந்துள்ளதாக கவலைகள் எழுந்துள்ள நிலையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
உதவிக்கு முன் வந்த இந்தியா :
அரிசி ஏற்றுமதியில் உலகின் நம்பர் ஒன் நாடாக இந்தியா உள்ளது. இந்நிலையில், இலங்கைக்கு ஒரு பில்லியன் டாலர் அளவுக்கு உணவு, மருந்து, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைக்க கடந்த மாதம் ஒப்புதல் அளிக்கப்பட்டது. கடந்த ஓராண்டில் அரிசியின் விலை இரு மடங்காக அதிகரித்துள்ள கொழும்பு நகரில், அரிசி விலையை கட்டுப்படுத்த இந்தியாவின் உதவி பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
Also Read : கொல்கத்தா அதிசயம் நீருக்கு அடியில் செல்லும் முதல் மெட்ரோ திட்டம் ரெடி!
இந்திய கடனுதவி ஒப்பந்தத்தின் கீழ், இலங்கை அரசின் வர்த்தக கழகத்திற்கு அரிசி அனுப்பி வைக்கும், பட்டாபி அக்ரோ ஃபுட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் பி.வி.கிருஷ்ண ராவ் இதுகுறித்துப் பேசுகையில், “நாட்டின் தெற்குப் பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் இருந்து அரிசி ஏற்றுமதி செய்யும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. வெகு எளிதாக மாற்றம் செய்யக் கூடிய கண்டெய்னர்களில் முதலில் அரிசியை நிரப்பி வருகிறோம்’’ என்று தெரிவித்தார்.
இலங்கையில் அவசரநிலை பிரகடனம்
முன்னதாக, உள்நாட்டில் மக்கள் போராட்டம் வெடித்ததைத் தொடர்ந்து, தேசிய அளவிலான பொது அவசரநிலை பிரகடனத்தை அதிபர் கோத்தபய ராஜபக்சே கடந்த வெள்ளிக்கிழமை இரவில் அமல்படுத்தினார்.
Also Read : 'பெரிய அண்ணன்' இந்தியாவுக்கு நன்றி.. இலங்கை முன்னாள் வீரர் ஜெயசூர்யா நெகிழ்ச்சி..
தற்போதைய சூழலில், இலங்கைக்கு வெகு விரைவாக அரிசி ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு இந்தியாவுக்கு மட்டுமே உள்ளது என்றும், பிற நாடுகள் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றால் வாரக் கணக்கில் ஆகும் என்றும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.