அமெரிக்காவைச் சேர்ந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினரான இல்ஹான் ஓமார் பாகிஸ்தான் பயணம் மேற்கொண்டுள்ளார். இம்ரான் கான் பிரதமர் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்ட பின் பாகிஸ்தானுக்கு பயணம் செல்லும் முதல் அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதி இவரே. இந்த பயணத்தின் போது இல்ஹான் அந்நாட்டு பிரதமர் ஷெபாஷ் ஷெரிப்பையும் சந்தித்தார்.அதன் பின்னர் இம்ரான் கானையும் இல்ஹான் சந்தித்தார்.
தன்னை பிரதமர் பதவியிலிருந்து வெளியேற்ற அமெரிக்கா உள்ளிட்ட அந்நிய நாடுகள் சதி செய்தன என இம்ரான் கான் குற்றஞ்சாட்டி வந்தார். இந்த சூழலில் இல்ஹான் இம்ரான் கானை சந்தித்து விவாதத்தை கிளப்பியுள்ளது. இந்நிலையில், இந்த நான்கு நாள் பயணத்தில் ஒரு பகுதியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இஹ்லான் சென்று பார்வையிட்டுள்ளார். இதற்கு இந்திய அரசு சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தாம் பக்சி கூறுகையில், இந்தியாவின் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த பகுதியை பாகிஸ்தான் தற்போது சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது. அந்த பகுதியை பாகிஸ்தான் நாடு சுற்றுப் பயணத்தின் போது அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் இல்ஹான் சென்று பார்வையிட்டுள்ளது அவரின் குறுகிய அரசியல் மனப்பான்மையை காட்டுகிறது. இது இந்தியாவின் இறையாண்மையை மீறுவதாக உள்ளதால் இல்ஹானின் நடவடிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவிக்கின்றது. என அவர் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அரிந்தாம், இந்த தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவிக்கிறது. அனைத்து விதமான பயங்கரவாத தாக்குதலையும் இந்தியா வன்மையாக எதிர்க்கிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள நிலவரத்தை இந்தியா கூர்ந்து கவனித்து வருகிறது எனக் கூறியுள்ளார்.
அமெரிக்க உறுப்பினர் இல்ஹானின் பாகிஸ்தான் சுற்றுப் பயணம் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், அமெரிக்க அரசு இந்த பயணம் அரசு முறை பயணம் அல்ல, இல்ஹானின் தனிப்பட்ட பயணம் என விளக்கமளித்துள்ளது.
Published by:Kannan V
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.