ஹோம் /நியூஸ் /இந்தியா /

கொரோனா நிலவரம்: 7 ஆயிரத்தை கடந்த தினசரி பாதிப்பு.. மகாராஷ்டிராவில் 4ஆம் அலை அச்சம்

கொரோனா நிலவரம்: 7 ஆயிரத்தை கடந்த தினசரி பாதிப்பு.. மகாராஷ்டிராவில் 4ஆம் அலை அச்சம்

தினசரி கோவிட் பாதிப்பு நிலவரம்

தினசரி கோவிட் பாதிப்பு நிலவரம்

12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசின் நிபுணர் குழு ஆலோசனை நடத்தி வருகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  இந்தியாவில் புதிதாக 7,240 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் நேற்றை விட தினசரி பாதிப்பு எண்ணிக்கை 40 சதவீதம் உயர்வு கண்டுள்ளது.

  மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரப்படி, நாட்டில் தற்போது கோவிட் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 32,498ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 8 உயிரிழப்புகள் பதிவான நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,24,723ஆக உள்ளது.

  நோய் தொற்று பரவும் தன்மையை குறிப்பிடும் தினசரி பாசிடிவிட்டி சதவீதம் 2.13% ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் மீண்டும் கோவிட் பரவல் அதிகரித்து வருவதை இதுகுறிக்கிறது. கடந்த 48 மணி நேரத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பு ஆகியுள்ளது. நாட்டின் அதிக பாதிப்புகளை கொண்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அம்மாநிலத்தில் கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவிற்கு தினசரி பாதிப்பு எண்ணிக்கை 2,701 ஆக பதிவாகியுள்ளது. இதில் மும்பை நகரத்தில் மட்டும் 1,242 பாதிப்புக்கள் அடக்கம். மகாராஷ்டிராவைப் போலவே கர்நாடகா, டெல்லி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை மெல்ல உயரத் தொடங்கியுள்ளது.

  தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 195 பேருக்கு பாதிப்பு பதிவான நிலையில், மாநிலத்தில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதில் பெரும்பாலான பாதிப்பு சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகியவற்றில் பதிவாகியுள்ளது.

  நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 3,40,615 பேருக்கு கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மகாராஷ்டிராவில் கொரோனா நான்காம் அலை ஏற்பட்டுள்ளதாக அச்சம் நிலவி வரும் நிலையில், மாநிலத்தில் அனைவரும் பொதுவெளியில் செல்லும் போதும் முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என முதலமைச்சர் உத்தவ் தாக்ரே வலியுறுத்தியுள்ளார்.

  இதையும் படிங்க: Headlines Today : நெல், சோளம், பருப்பு போன்றவற்றின் கொள்முதல் விலை உயர்வு.. - தலைப்புச் செய்திகள் (ஜூன் 9, 2022)

  நாட்டில் கடந்த ஒரே நாளில் 15 லட்சத்து 43 ஆயிரத்து 748 கோவிட் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசின் நிபுணர் குழு ஆலோசனை நடத்தி வருகிறது. இந்தியாவில் 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கோவாக்சின், கோர்பேவாக்ஸ் ஆகிய தடுப்பூசிகளை அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதிக்கலாம் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு மும்முரமாக செயல்பட்டு வருகிறது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Corona, Covid-19, Maharashtra