நாட்டின் கோவிட்-19 பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் புதிய தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3,377ஆக பதிவாகியுள்ளது.இதன் மூலம் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 72 ஆயிரத்து 176ஆக அதிகரித்துள்ளது.
கடந்த சில நாள்களாக தினசரி பாதிப்பு தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையில், கோவிட்-19 பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 17, 801ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 60 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதை அடுத்து மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5 ,23,753ஆக உள்ளது.
தினசரி பாதிப்பு விகிதம் 0.71 சதவீதமாகும், வார பாதிப்பு விகிதம் 0.63 சதவீதமாகவும் உள்ளது. கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையும் 4 ,25 ,30,622ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் பதிவான உயிரிழப்புகளில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,47,840 பேரும், அதற்கு அடுத்தபடியாக கேரளாவில் 68,966 பேரும் உயிரிழந்துள்ளனர்.
40,099 உயிரிழப்புடன் மூன்றாவது இடத்தில் கர்நாடகாவும், 38,025 உயிரிழப்புடன் நான்காவது இடத்தில் தமிழ்நாடும் உள்ளன. இதில் தாமதமாக திருத்தப்பட்டு மாற்றப்பட்ட எண்ணிக்கைகளும் அடக்கம்.
இந்தியாவில் கோவிட்-19 ஒமிக்ரான் அலையின் தாக்கம் பிப்ரவரி இறுதியில் ஓய்ந்த நிலையில், அனைத்து மாநிலங்களும் கட்டுப்பாடுகளை தளர்த்தி இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்தன. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக நாட்டில் மீண்டும் கோவிட் பாதிப்பு எண்ணிக்கை தலைத்தூக்கத் தொடங்கியுள்ளது. தினசரி பாதிப்பு ஆயிரத்துக்கும் குறைவாக பதிவாகிக்கொண்டிருந்த நிலையில், தற்போது அது மீண்டும் நான்காயிரத்தை நெருக்கிக்கொண்டு இருக்கிறது. கோவிட்-19 நிலவரம் குறித்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இரு நாள்களுக்கு முன்னர் ஆலோசனை நடத்தினர். முன்னெச்சரிக்கை தடுப்பூசி டோஸ், சிறார்களுக்கான தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்த அவர் அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க:
ஒரு பேரல் கச்சா எண்ணெய்யில் எத்தனை லிட்டர் பெட்ரோல், டீசல் கிடைக்கும்- லாபம் என்ன?
இந்தியாவில் இதுவரை 188 கோடியே 61 லட்சத்துக்கும் மேற்பட்ட கோவிட் டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.இதில் 100 கோடிக்கும் மேற்பட்டோர் ஒரு டோசும், 85 கோடிக்கும் மேற்பட்டோர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். 18 வயதுக்கு மேற்பட்டோரில் 96 சதவீதத்தினர் ஒரு டோஸ் தடுப்பூசியும், 84 சதவீதத்தினர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். 12-18 வயதினருக்கான தடுப்பூசி திட்டம் தற்போது நடைமுறையில் உள்ள நிலையில், 12 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கான தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்த அரசு தீவிரமாக செயல்பட்டுவருகிறது. இதற்கான ஒப்புதல் இன்னும் சில நாள்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.