அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஜப்பான் 3 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம் டெல்லியில் கையெழுத்தாகியுள்ளது.
இந்தியாவிற்கு 2 நாள் அரசு முறைப் பயணமாக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா டெல்லி வந்துள்ளார். இந்தியில் நமஸ்தே என்று பேசிய கிஷிடா, சீனா எல்லை விவகாரம், இந்திய - பசிபிக் பிராந்திய விவகாரங்கள் குறித்து மோடியிடம் ஆலோசித்தார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் குறித்து பேசிய இருநாட்டு தலைவர்களும், ரஷ்யாவின் செயலால் சர்வதேச அளவில் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது குறித்தும் ஆலோசித்தனர்.
குவாட் அமைப்பில் ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத ஒரே நாடு இந்தியா என்பதால் அது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இருநாடுகளின் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் 6 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதையும் படிங்க - பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டம் உலகிற்கே வழிகாட்டுகிறது.. தமிழிசை சௌந்தரராஜன்
சைபர்பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, சுகாதாரம் உள்ளிட்ட பிரிவுகளில் ஜப்பான் முதலீடுகள் செய்துள்ளது. இதில் இந்தியாவின் உள்கட்டமைப்புக்கு மட்டும் 20 ஆயிரத்து 400 கோடி ரூபாயை ஜப்பான் முதலீடு செய்கிறது.
கரியமில வாயு வெளியேற்றமில்லாத தூய்மையான ஆற்றல் துறையிலும் இருநாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குவாட் அமைப்பில் இடம்பெற்றுள்ள இருநாடுகளின் பாதுகாப்பு குறித்தும் பிரதமர் மோடியும் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவும் ஆலோசனை நடத்தினர்.
இதையும் படிங்க - கல்வி காவிமயம் ஆவதில் என்ன தவறு? குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு
ஹிரோஷிமாவைச் சேர்ந்த கிஷிடா, அக்டோபர் 4, 2021 அன்று ஜப்பானின் பிரதமராகப் பதவியேற்றார். ஹிரோஷிமாவில் இருந்து ஜப்பானின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
பிரதமராக பொறுப்பேற்பதற்கு முன்னதாக ஜப்பானின் வெளியுறவு அமைச்சராக இருந்தார். அந்த வகையில் பிரதமர் மோடியை அவர் 4 முறை சந்தித்துள்ளார். லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் கொள்கை ஆராய்ச்சி கவுன்சிலின் தலைவராகவும் அவர் பிரதமர் மோடியை சந்தித்தார். வெளியுறவு அமைச்சராக இருந்தபோதும் அவர் இந்தியாவுக்கு வந்ததால், தற்போதைய அவரது பயணம் இரு நாட்டு உறவை பலப்படுத்தும் என்று வல்லுனர்கள் கணித்துள்ளார்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.