Home /News /national /

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை ; வரலாறு சொல்லும் பல அரிய உண்மைகள்..

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை ; வரலாறு சொல்லும் பல அரிய உண்மைகள்..

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை

India-Pakistan partition | இந்தியாவின் சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், ஒரு நாளுக்கு முன்னதாகவே பாகிஸ்தான் சுதந்திர தினத்தை கொண்டாடுவதும், அந்த நாடு பிரிக்கப்பட்டதற்கான காரணத்தையும் விளக்கும் பதிவு தான் இது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
  சுதந்திர தினத்தை கொண்டாடுவது ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சியானதாக இருந்தாலும், நினைத்த உடன் வருத்தத்தை ஏற்படுத்துவது பிரிவினை. உலகின் பல பகுதிகளை ஒற்றைக் குடையின் கீழ் ஆட்சி செய்த ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்தது பரந்து பட்ட பாரத தேசம். அவர்களிடம் இருந்து விடுதலை பெற மன்னர்கள் காலத்தில் இருந்து தொடர்ந்து பல போராட்டங்கள்  நடைபெற்று வந்தது.

  இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டம் 1885 டிசம்பர் மாதத்தில் மும்பையில் நடைபெற்றது. அதில் விடுதலை கோரிக்கையைவிட, ஆங்கிலேயர் ஆட்சியில் வாழும் இந்திய மக்களின் நிலையை மேம்படுத்துவது அவசியம் என்ற  கோரிக்கையே அதிகமாக  முன்வைக்கப்பட்டது.

  1905ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு முழுமையான சுதந்திரம் தேவை என்ற குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. பெரும்பான்மையினரான இந்துக்களின் மத்தியில் முஸ்லீம்கள் வாழ முடியாது என்ற கருத்து உருவானபோதே, ஒன்றுபட்ட இந்தியாவில் அப்போது இருந்த முஸ்லீம்களின் எண்ணிக்கை 40 சதவீதம்...

  Read More : இந்தியர்கள் அனைவரும் இந்த 5 உறுதிமொழிகளை ஏற்க வேண்டும்.. பிரதமர் மோடி பேச்சு


  மறுக்கப்பட்ட பிரதிநிதித்துவம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 1906ல் இந்திய முஸ்லீம்களின் அதிகாரத்தை பாதுகாப்பதற்காக முஸ்லீம் லீக் உருவாக்கப்பட்டது. அதற்கு முன்பும், பின்பும் இந்து - முஸ்லீம் மக்களிடையே பதற்றமான சூழல் தொடர்ந்து வந்தது.

  மகாத்மா காந்தி - முகமது அலி ஜின்னா இடையே 1938 பிப்ரவரியில் தொடங்கிய பேச்சுவார்த்தை ஜூலையில் தோல்வியில் முடிவடைந்தது. அதன் தொடர்ச்சியாக, 1940, மார்ச் 23ஆம் தேதி தனி பாகிஸ்தான் தீர்மானம் முன்மொழியப்பட்டது.

  பாகிஸ்தான் பிரிவினைக்கு மறுப்பு தெரிவித்த மகாத்மா காந்தி

  1942ஆம் ஆண்டில் தொடங்கியது வெள்ளையனே வெளியேறு இயக்கம். 1944 செப்டம்பர் மாதத்தில் பாகிஸ்தான் கோரிக்கை குறித்து ஜின்னாவுடன் மகாத்மா காந்தி நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியிலேயே முடிவடைந்தது.

  பாகிஸ்தான் உருவான பிறகே சுதந்திரம் என்பதில் ஜின்னா உறுதியாக இருக்க, பிரிவினை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டார் மகாத்மா காந்தி. இந்தியாவுக்கு விடுதலை வழங்குவது குறித்து 1946ல் அமைக்கப்பட்ட பேச்சுவார்த்தை குழுவில் இருந்து முஸ்லீம் லீக் விலகியது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்கள், பல இடங்களில் வன்முறையாக வெடித்து, பல நூறு உயிர்களை பலி வாங்கியது.

  கொல்கத்தாவில் மட்டும் நான்காயிரம் மக்கள் கொல்லப்பட, ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்து, ஒரு லட்சம் பேர் வீடுகளை இழக்க வைத்தது அந்த வன்முறை. நாடு முழுவதும் கலவரம் காட்டுத் தீப்போல பரவி வந்த நிலையில், பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என ஏப்ரல் 15ஆம் தேதி கோரிக்கை வைத்தனர் காந்தியும், ஜின்னாவும்.

  Read More : 75வது சுதந்திர தினம் : தேசிய கீதத்தை பிழை இல்லாமல் பாடி அசத்தும் 3வயது சிறுவன்..! - வைரலாகும் வீடியோ


  ஜூன் 2ஆம் தேதி பிரிவினைத் திட்டத்தை இந்திய தலைவர்களின் முன் வைத்தார் வைஸ்ராயாக இருந்த மவுண்ட்பேட்டன். மறுநாள் ஜவஹர்லால் நேரு, முகமது அலி ஜின்னா, சீக்கிய பிரதிநிதி ஆகியோர் அறிவிப்பை வெளியிட, 1947 ஆகஸ்ட் 14ஆம் தேதி பாகிஸ்தான் உருவானது.

  அன்று நள்ளிரவு 12 மணிக்கு பிரிட்டன் மற்றும் இந்தியா இடையே அதிகார பரிமாற்றம் நிகழ, ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கியது இந்தியா. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையால் வீடு மற்றும் சொத்துகளை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்ட மக்களின் எண்ணிக்கை ஒன்றே கால் கோடி...

  வன்முறை வெறியாட்டத்தில் சுமார் 10 லட்சம் பேர் கொல்லப்பட, பல்லாயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் வரலாறு சொல்கிறது. சரித்திரத்தின் பக்கங்களில் பொதுமக்கள் மீது இதுபோன்ற கொடூரமான, சோகமான நிகழ்வுகள் வேறு எங்கும் இருக்க முடியாது. பிரிவினை என்பது புதிதாக ஒரு நாட்டை மட்டும் உருவாக்காமல், கொடூர நினைவுகளையும், ஆறா வடுக்களையும் இருதரப்பில் உருவாக்கி வைத்துவிட்டது என்பதில் சந்தேகமில்லை.

  செய்தியாளர் பெரிய பத்மநாபன்

   
  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Independence day, India, India vs Pakistan

  அடுத்த செய்தி