அமெரிக்காவுக்கு அடுத்ததாக தினசரி கொரோனா பாதிப்பில் 1.50 லட்சத்தை கடந்த 2வது நாடானது இந்தியா!

கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1.52 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

  • Share this:
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் 2ம் அலை படுவேகமாக பரவி வருகிறது. கடந்த ஆண்டைக்காட்டிலும் தற்போது தினசரி பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது. இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,52,879 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவுக்கு அடுத்ததாக தினசரி பாதிப்பில் 1.5 லட்சத்தை கடந்த 2வது நாடாக இந்தியா மாறியுள்ளது.

இதனையடுத்து நோய்த்தொற்றால் பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 1,33,58,805 ஆக அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் புதிதாக நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 50% உயர்ந்துள்ளது.

அதே போல நாட்டில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 839 பேர் உயிரிழந்திருப்பதாகவும் இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 1,69,275 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே அதிகபட்ச கொரோனா பாதிப்பை மகாராஷ்டிர மாநிலம் சந்தித்து வருகிறது . அங்கு ஹோலி கொண்டாட்டங்களுக்கு பிறகு கடந்த 2 வாரங்களாகவே பாதிப்பு எண்ணிக்கையானது கடுமையாக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் மட்டும் 55,411 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே போல சட்டீஸ்கரில் 14,098 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு பாதிப்பு மட்டுமல்லாது உயிரிழப்புகளும் கடுமையாக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் அங்கு 123 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 90,584 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளதால் மொத்தமாக குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,20,81,443 ஆக உயர்ந்துள்ளது. தற்போது இந்தியாவில் நோய்த்தொற்றுக்காக சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 11,08,087 ஆக அதிகரித்துள்ளது.

உயிருடன் இருந்த கொரோனா நோயாளியை இறந்துவிட்டார் என அறிவித்த மருத்துவர்கள்: நாக்பூரில் ஏற்பட்ட குழப்பம்!


இதற்கிடையே நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 கோடியை கடந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை 85 நாட்களில் 10,15,95,147 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. உலகிலேயே 10 கோடி பேருக்கு மிக விரைவாக தடுப்பூசி செலுத்திய நாடாக இந்தியா திகழ்வது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் ஏப்ரல் 10ம் தேதி நிலவரப்படி இதுவரை 25,66,26,850 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 14,12,047 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

தடுப்பூசி செலுத்திய பின்னரும் சிலர் கொரோனா பாதிப்புக்கு ஆளாவது ஏன்?


நோய்த்தொற்று கடுமையாக அதிகரித்துள்ளதால் பல்வேறு மாநிலங்களிலும், நகரங்களிலும் இரவு நேர ஊரங்கு, பகுதி நேர ஊரடங்கு உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்டுள்ளதுடன் கட்டுப்பாடுகளும் கொண்டுவரப்பட்டுள்ளன.
Published by:Arun
First published: