இந்திய ராணுவத்தின் தளபதியாக இருந்த எம்.எம். நரவனே சனிக்கிழமை ஓய்வுபெற்றார். அதனை தொடர்ந்து நாட்டின் 29-வது ராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே பதவியேற்றார்.
1962 -ஆம் ஆண்டு மே 6- ஆம் தேதி பிறந்த மனோஜ் பாண்டே இந்திய ராணுவத்தில் பொறியாளராகப் பணியாற்றியவர். பொறியாளராக பணியாற்றியவர் ராணுவத் தளபதியாக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
தேசிய பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவரான பாண்டே 1982-ம் ஆண்டு டிசம்பரில் கார்ப்ஸ் ஆப் இன்ஜினியராக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு பல்லன்வாலா எல்லையில் ஆப்ரேஷன் பராக்கிரம் நடத்தப்பட்டபோது பொறியாளர் படைப் பிரிவுக்குத் தலைமை தாங்கினார்.
தனது 39 ஆண்டுக்கால ராணுவ வாழ்க்கையில் பொறியாளர் படைப்பிரிவு கட்டுப்பாட்டிலுள்ள காலாட்படை பிரிவுக்கும், லடாக் செக்டாரின் மலைப் பிரிவுக்கும் தலைமை தாங்கியுள்ளார். இதற்கு முன்பு ஜெனரல் மனோஜ் பாண்டே அந்தமான் நிக்கோபார் படைப்பிரிவின் தளபதியாக இருந்தார்.
இதையும் படிங்க: வெப்பமான ஏப்ரல்...122 ஆண்டுகளில் இல்லாத வெயில்: 9 மாநிலங்களில் பதிவாகியது
பாகிஸ்தானுடனான எல்லைக்கட்டுப்பாட்டு பகுதி, சீனாவுடன் லடாக் எல்லையில் இந்திய ராணுவம் பல்வேறு சவால்களை சந்தித்து வரும் நிலையில் ராணுவத்தின் தளபதியாக ஜெனரல் பாண்டே பொறுப்பேற்றுள்ளார்.
ராணுவ தளபதி என்ற முறையில் விமானம் மற்றும் கடற்படைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவை தற்போது 17 தலைமையகங்களை கொண்டுள்ளது. அவற்றை நான்கு ஒருங்கிணைந்த தலைமையகங்களாக மாற்றுவதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. அதில், ஒரு கடல் சார் தலைமையகம், ஒரு வான் பாதுகாப்பு தலைமையகம் மற்றும் இரண்டு நில அடிப்படையிலான மேற்கு மற்றும் கிழக்கு தலைமையகங்களாக ஒருங்கிணைக்க திட்டம் உள்ளது.
மேலும் படிக்க: 2022இல் முதல் வெளிநாட்டு பயணம் - 8 உலக தலைவர்கள், 50 தொழிலதிபர்களை 3 நாளில் சந்திக்கும் பிரதமர் மோடி
முன்னதாக ஓய்வு பெற்ற ராணுவ தளபதி ஜெனரல் நரவனே, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து பேசினார். ஓய்வு பெற்ற ராணுவ தளபதி ஜெனரல் நரவனே-வுக்கு, சவுத் பிளாக்கில் ராணுவத்தினரின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.