இந்தியா - நேபாளம் இடையே 21 ஆண்டுகளுக்குப் பிறகு, பயணிகள் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
நேபாள பிரதமர் ஷேர் பஹதூர் டியூபா, 3 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். வெள்ளிக் கிழமை டெல்லி வந்தடைந்த அவருக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்ற அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் டெல்லி ஹைதராபாத் இல்லதில் பிரதமர் மோடியும் ஷேர் பஹதூர் டியூபாவும் சந்தித்து இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை நடத்தினர். நேபாளம் அதிகாரப்பூர்வமாக சர்வதேச சூரிய கூட்டணியில் இணைதல், நேபாள ரயில்வே துறைக்கு இந்திய தொழில்நுட்ப உதவி வழங்குதல் , பெட்ரோலிய துறையில் ஒத்துழைப்பு, நேபாள ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் இடையே நிபுணத்துவ பரிமாற்றம் என நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பின்னர் 132 கிலோவோல்ட் solu corridor மின் திட்டம் மற்றும் துணை மின் நிலையத்தை மோடியும் ஷேர் பஹதூர் டியூபாவும் துவங்கி வைத்தனர். இந்தியாவில் இயங்கி வரும் RUpay பண பரிவர்த்தனை முறை நேபாளிலிலும் தொடங்கி வைக்கப்பட்டது.
பின்னர் பீகார் மாநிலம் ஜெய்நகரில் இருந்து நேபாளத்தின் குர்த்தா வரையிலான, 35 கிலோ மீட்டர் தொலைவுக்கான ரயில் சேவையை இருவரும் கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.
ஜெய்நகர்-குர்தா எல்லை தாண்டிய ரயில் இணைப்பு நேபாளத்தின் முதல் நவீன ரயில் சேவையாகும். இந்த ரயில் ஐந்து பெட்டிகளுடன் இயக்கப்படும்.
68 கிலோ மீட்டர் ஜெய்நகர்-குர்தா சேவை ஜெய்நகர்-பிஜல்புரா-பர்திதாஸ் ரயில் இணைப்பின் ஒரு பகுதியாகும். இந்த திட்டத்திற்கு இந்திய அரசு 550 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது.
இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையே ரயிலில் பயணிக்கும் மக்கள், புகைப்படத்துடன் கூடிய அசல் அடையாள அட்டையை எடுத்துச் செல்வது கட்டாயமாகும்.
1937- ஆம் ஆண்டு முதல், பீகாரிலிருந்து நேபாளத்தின் பிஜிலாபுரா நகருக்கு ரயில் இயக்கப்பட்டு வந்தது. 2001- ஆம் நேபாளத்தில் பெய்த கனமழை காரணமாக தண்டவாளம் அடித்துச் செல்லப்பட்டு சேவை நிறுத்தப்பட்டது. 21 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இந்தியா நோபாளம் இடையே ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.