நாட்டில் முதல்முதலாக விலங்குகளுக்கான கோவிட்-19 தடுப்பூசியை வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தொடங்கி வைத்தார். இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட இந்த தடுப்பூசிக்கு அனகோவாக்ஸ் (Anocovax) எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இந்திய வேளாண் ஆய்வு கழகம் ICAR (Indian Council of Agricultural Research) இதை உருவாக்கியுள்ளது.
அனகோவாக்ஸ் என்ற இந்த தடுப்பூசி டெல்டா மற்றும் ஓமிக்ரான் வகை கோவிட் தொற்றுக்கு எதிராகவும் சிறப்பாக செயல்படும், பெரும்பாலான கோவிட் தொற்று அனைத்திற்கு எதிராகவும் நோய் எதிர்ப்பு சக்தியை இது உருவாக்கும் எனவும் ஐசிஏஆர்(ICAR - Indian Council of Agricultural Research) கூறியுள்ளது.
இந்த கோவிட்-19 தடுப்பூசி நாய், பூனை, சிங்கம், சிறுத்தை, எலி, முயல் என பல விலங்குகளுக்குச் செலுத்தலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இது குறித்து வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறுகையில், 'விஞ்ஞானிகள் தங்களின் தனித்துவமான திறமையை உலகிற்கு பறைசாற்றும் விதமாக நாட்டிலேயே முதல் விலங்குகளுக்கான கோவிட் தடுப்பூசியை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் தற்சார்பு இந்தியா என்ற கனவை இவர்கள் நனவாக்கியுள்ளனர். தடுப்பூசிக்காக வெளிநாடுகளின் உதவியை நாம் சார்ந்திருக்க தேவையில்லை. இது மாபெரும் சாதனை' என்றுள்ளார்.
இதையும் படிங்க:
100 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்ட அரியவகை Lipstick தாவரம்
இந்த கோவிட் தடுப்பூசியுடன் CAN-CoV-2 ELISA kit, Surra ELISA kit என்ற இரு பரிசோதனை கருவிகளை ஐசிஏஆர் நேற்று அறிமுகம் செய்தது. விலங்குகளிடம் காணப்படும் SARS-CoV-2, Surra என இரு நோய் தொற்றுகளை கண்டறியும் திறனை இந்த பரிசோதனை கருவிகள் மூலம் முறையே கண்டறியலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.