கொரோனா தடுப்பூசி போட்டதில் உலக அளவில் 3-வது இடத்தில் இந்தியா - மத்திய அமைச்சகம்

கொரோனா தடுப்பூசி போட்டதில் உலக அளவில் 3-வது இடத்தில் இந்தியா - மத்திய அமைச்சகம்

கொரோனா தடுப்பூசி

மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியாவில் 12 மாநிலங்களில் தலா 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் மட்டும் சுமார் 6.73 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 • Share this:
  உலக அளவில் கொரோனா வைரஸ் மிகப்பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகள் பலவும் இந்த பாதிப்பில் இருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை. இந்த வைரஸ் பரவலைத் தடுக்க தடுப்பூசி மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இதனால், பல நாடுகளிலும் தடுப்பூசி தொடர்பான சோதனை நடந்து வருகின்றன. உலகின் முக்கிய நாடுகள் பலவும் தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துவிட்டன. இந்த நிலையில், தடுப்பூசி வழங்குவதில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  கொரோனாவால் அதிக மக்கள் பாதிப்படைந்த நாடான அமெரிக்கா முதல் இடத்தையும் இங்கிலாந்து இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியாவில் 12 மாநிலங்களில் தலா 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் மட்டும் சுமார் 6.73 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிப்ரவரி 7-ம் தேதி காலை எட்டு மணி வரையிலான நிலவரப்படி நாடு முழுவதும் 57.75 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுகாதார ஊழியர்கள், முன்னணி பணியாளர்கள் என பலரும் இந்த எண்ணிக்கையில் அடங்குவர்.

  ஒவ்வொரு நாளும் தடுப்பூசி போடப்படும் பயனாளிகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாகவும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் தினசரி எண்ணிக்கை 80-க்கும் கீழ் உள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஒன்பது மாதங்களை ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவு எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Ram Sankar
  First published: