நாட்டில் சமையல் எண்ணெய் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. இந்தோனிசியா பாமாயில் ஏற்றுமதிக்கு தடை விதித்ததை அடுத்து சர்வதேச அளவில் எண்ணெய் விலை உயரும் எனவும் அதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிக்கும் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில், மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், நாட்டில் தற்போது 21 லட்சம் மெட்ரிக் டன் சமையல் எண்ணெய் இருப்பில் உள்ளது. மேலும், 12 லட்சம் மெட்ரிக் டன் எண்ணெய் இம்மாதம் கூடுதலாக வரவுள்ளது. மேலும், நாட்டின் எண்ணெய் வித்து உற்பத்தியும் இந்தாண்டு உயர்வைக் கண்டுள்ளது. கடந்தாண்டு சோயா பீன்ஸ் உற்பத்தி 112 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்த நிலையில், தற்போது அது 126.10 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. மேலும், கடுகு உற்பத்தியும் 37 சதவீதம் உயர்ந்து 114 லட்சம் மெட்ரிக் டன்னாக கணக்கிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, எண்ணெய் வித்துக்கள் மூலமான எண்ணெய் உற்பத்தியும் இந்தாண்டு நல்ல உயர்வை கண்டுள்ளது. எனவே, நுகர்வோர் தேவையை பூர்த்தி செய்யும் விதத்தில் எண்ணெய் கையிருப்பு நாட்டில் உள்ளது. உலகின் மிகப் பெரிய எண்ணெய் வித்து உற்பத்தியாளராக இந்தியா உள்ள நிலையில், நாட்டின் எண்ணெய் விலை நிலவரத்தை அரசு தொடர்ந்து கண்காணித்துவருகிறது. நுகர்வோர் நலனை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் சிறப்பு குழுக்களை அமைத்து பதுக்கல் மற்றும் விலையேற்றத்தை தடுத்து வருகிறது.
இதையும் படிங்க:
நாடு முழுவதும் வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.100க்கு மேல் உயர்வு
இந்தியா தனது சமையல் எண்ணெய் இறக்குமதியில் 62 சதவீதம் பாமாயில் இறக்குமதி மூலம் மேற்கொள்கிறது. இதற்காக இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகள் இந்தியா சார்ந்துள்ளது. மேலும் சோயாபீன் எண்ணெய்க்கு அர்ஜென்டினா மற்றும் பிரேசிலையும், சூரியகாந்தி எண்ணெய் இற்குமதிக்கு உக்ரைன் மற்றும் ரஷ்யாவையும் சார்ந்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.