வங்கக் கடலில் கடந்த திங்கட்கிழமை உருவான யாஸ் புயல், தொடர்ந்து அதி தீவிர புயலாக வலுவடைந்தது. புதன்கிழமை காலை 9 மணிக்கு ஒடிசாவின் பாலசூர் அருகே 50 கிலோ மீட்டர் தொலைவில் புயல் கரையை கடக்கத் தொடங்கியது. முதலில் 15 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்த புயல் பின்னர் 24 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்தது. பிற்பகல் 12.30 மணியளவில் புயலின் கண் பகுதி கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 120 முதல் 145 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது.
கரையைக் கடந்த புயலின் வேகம் குறைந்து தீவிர புயலாக அது வலுவிழந்தது. புயல் கரையைக் கடந்த போது பலத்த காற்றுடன் ஒடிசாவின் பாலசோர், பத்ராக், ஜகத்சிங்க்பூர் மற்றும் கேந்திரபாரா மாவட்டங்களிலும், மேற்கு வங்கத்தில், தெற்கு மற்றும் வடக்கு 24 பர்கானாக்கள், திகா, கிழக்கு மெதினிபூர் மற்றும் நந்திகிராம் மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பல பகுதிகள் நீரில் மூழ்கி வெள்ளக்காடாய் காட்சியளித்தன.
Also Read : லட்சத்தீவில் நடப்பது என்ன? #SaveLakshadweep டிரெண்டாக காரணம் என்ன?
பல வீடுகளின் மேற்கூரைகள், சாலையோரம் இருந்த பெட்டி கடைகள் சூறைக் காற்றில் தூக்கி வீசப்பட்டதுடன், ஆங்காங்கே சாலைகளில் மரங்களும் முறிந்து விழுந்தன. கருமேகங்களால் சூழ்ந்து பல பகுதிகள் நண்பகலே இருண்டு காணப்பட, நீர்நிலைகளின் தடுப்பு சுவர்களை தகர்த்து பல பகுதிகளில் நீர் ஊருக்குள் புகுந்தது. ஒடிசாவின் பாரதீப் படகுதுறையில் நிறுத்தப்பட்டிருந்த மீன்பிடி படகுகள் சேதமடைந்தன.
பாதிப்புகள் குறித்து அதிகாரிகளுடன் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேற்கு மெதினிபூர் பகுதியில் தற்காலிக முகாமிலிருந்து வெளியே வந்த ஒருவர், சூறாவளிக் காற்றில் சிக்கி உயிரிழந்ததாக தெரிவித்தார். புயல் காரணமாக 3 லட்சம் வீடுகள் சேதமடைந்ததாகவும், 134 நீர்நிலைகளின் கரைகள் அடித்துச் செல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.
Also Read : புதிய விதிமுறைகள் வாட்ஸ் அப்பின் செயல்பாட்டை பாதிக்காது - மத்திய அரசு விளக்கம்
அலைகள் மேலே உயர்ந்து வந்ததால், கடும் சேதங்கள் ஏற்பட்டதாகவும், ஒரு கோடி பேர் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் மம்தா பானர்ஜி தெரிவித்தார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டதாக மம்தா கூறினார்.
தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் விமானப்படையினர் ஆகியோர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தின் அரக்கோணத்திலிருந்தும் நிவாரணப் பொருட்களுடன், விமானப் படை விமானத்தில் மீட்புப்படையினர் சென்றனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் வியாழன் வரை கனமழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.