• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • லடாக் எல்லையில் பதற்றத்தை தணிக்க 5 அம்ச திட்டத்துக்கு இந்தியா - சீனா ஒப்புதல்

லடாக் எல்லையில் பதற்றத்தை தணிக்க 5 அம்ச திட்டத்துக்கு இந்தியா - சீனா ஒப்புதல்

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யி இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

  • Share this:
    லடாக் எல்லையில் நிலவி வரும் பதற்றத்தை தணிப்பதற்கு, படைகளை விலக்கிக் கொள்வது உள்ளிட்ட ஐந்து அம்ச திட்டத்திற்கு இந்தியா - சீனா இருநாடுகளும் ஒப்புதல் தெரிவித்துள்ளன.

    லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், கடந்த ஜுன் 15ம் தேதி நிகழ்ந்த மோதலில், இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். இந்த மோதலை தொடர்ந்து எல்லையில் பதற்றம் அதிகரித்து வந்த சூழலில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு தொடங்கியது.

    இந்த மாநாட்டில் கடந்த 4ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், சீன ராணுவ அமைச்சர் வெய் ஃபெங்கியை, ராஜ்நாத் சிங் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது எல்லையில் இருந்து படைகளை முழுமையாக விலக்கிக் கொள்ள இந்தியாவுடன் இணைந்து சீனா ஒத்துவைப்பு தரவேண்டும் என ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார். ஆனால் அதன்பின்னரும் 7ம் தேதி அன்று லடாக் எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக இருநாடுகள் பரஸ்பரம் குற்றம்சாட்டி வந்தன.

    இந்தநிலையில் வியாழன் அன்று மாஸ்கோவில் நடைபெற்ற சந்திப்பில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யி இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், லடாக் எல்லையில் நிலவும் பதற்றமான சூழல் குறித்து இருவரும் விவாதித்தனர்.

    அப்போது எல்லையில் சீனா படைகளை குவித்து வருவது குறித்து ஜெய்சங்கர் கடும் அதிருப்தி தெரிவித்தார். மேலும் பதற்றம் நிறைந்த பகுதிகளில் இருந்து, சீன படைகள் விலக்கிக் கொள்ளப்படுவது ஒன்றே இதற்கு தீர்வாக அமையும் எனவும் குறிப்பிட்டார். பேச்சுவார்த்தைக்குப் பின்னர், இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் ஐந்து அம்ச கூட்டு அறிக்கையை வெளியிட்டனர்.

    அதில், எல்லையில் தற்போது உள்ள சூழ்நிலை இருதரப்புக்கும் உகந்ததாக இல்லை என்பதால், விரைவில் படைகளை வாபஸ் பெற்று, பதற்றத்தை தணிக்க முடிவு செய்யப்பட்டது. ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்கள், மரபுகளை பின்பற்றி எல்லைப் பிரச்னையில் கருத்தொற்றுமை ஏற்பட வழிவகுக்க வேண்டும் எனவும், எல்லையில் பதற்றத்தை அதிகரிக்கும் எந்த ஒரு செயலிலும் இருதரப்பினரும் ஈடுபடக்கூடாது எனவும் முடிவு செய்யப்பட்டது.



    பதற்றம் தணிந்த பிறகு இருநாடுகளுக்கு இடையேயும் நம்பிக்கையை வளர்ப்பதற்கான புதிய முயற்சிகளை செயல்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சிறப்புப் பிரதிநிதிகள் மூலம் இருநாடுகளும் தொடர்ந்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் ஒப்புக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: