ஹோம் /நியூஸ் /இந்தியா /

அமெரிக்காவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி... 3 ஆண்டுகளில் 10 மடங்கு உயர்வு..!

அமெரிக்காவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி... 3 ஆண்டுகளில் 10 மடங்கு உயர்வு..!

ட்ரம்பும் மோடியும் (கோப்புப்படம்)

ட்ரம்பும் மோடியும் (கோப்புப்படம்)

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

அமெரிக்காவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அமெரிக்காவிடம் வாங்கும் கச்சா எண்ணெய் அளவு, கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 10 மடங்கு அதிகரித்திருக்கிறது.

அமெரிக்க அதிபரின் இந்திய பயணத்தின்போது இருநாடுகள் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், அதில் எரிசக்தி தொடர்பான விஷயங்கள் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இந்தியா தனது தேவைக்கான கச்சா எண்ணெய்யை பெரும்பாலும் ஈரான், ஈராக், செளதி போன்ற நாடுகளிடம் இருந்துதான் இறக்குமதி செய்து வருகிறது.

இந்நிலையில், ஈரான் மீதான பொருளாதாரத் தடை காரணமாக, அந்நாட்டிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துக் கொண்டது. அதற்குப் பதிலாக, அமெரிக்காவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உதாரணமாக, 2017 -18ஆம் ஆண்டில், முதன்முறையாக அமெரிக்காவிடம் இருந்து தினமும் 38 ஆயிரம் பேரல் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்த இந்தியா, 2018-19ஆம் ஆண்டில் தினமும் 1.24 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்தது.

இந்நிலையில், 2019-20ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் மட்டும் சுமார் ஒரு லட்சம் பேரலை தாண்டி கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள், தினமும் சுமார் 2.5 லட்சம் பேரல் என்ற அளவைத் தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எரிசக்தி துறையில் இந்தியா அமெரிக்காவின் உறவு குறித்து பேசிய அமெரிக்க எரிசக்தி துறை பிரதிநிதி டான் ப்ரூலெட், அமெரிக்காவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது, கடந்த 3 ஆண்டுகளில் 10 மடங்கு அதிகரித்திருப்பதாகக் கூறியுள்ளார்.

பொதுவாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு டாலர் அதிகரித்தால், இந்தியாவிற்கு 7200 கோடி ரூபாய் செலவு அதிகரிக்கும். இந்நிலையில், அமெரிக்காவிடம் இருந்து பெறப்படும் கச்சா எண்ணெய்யின் விலை ஒபெக் நாடுகளில் இருந்து பெறப்படும் கச்சா எண்ணெய் விலையைக் காட்டிலும் பேரலுக்கு சுமார் 3 டாலர்கள் குறைவு. அமெரிக்காவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய், சுத்திகரிக்க எளிது என்றும் அதில் சல்ஃபரின் அளவு குறைவு என்றும் தெரிகிறது.

கொரோனா பாதிப்பு காரணமாக, சீனா தனது கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைத்துக் கொண்டுள்ள நிலையில், அதற்குத் தகுந்தாற்போல், ஒபெக் நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்துக் கொள்ள மறுத்துள்ளன. இதன் காரணமாக, கச்சா எண்ணெய் விலை மேலும் சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிலையில், ஒபெக் நாடுகளில் இருந்து இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் விலை 56 டாலராக இருக்கிறது. ஆனால், அமெரிக்காவிடம் அது 52 டாலராக உள்ளது.

நம் தேவைக்கான கச்சா எண்ணெய்யில், சுமார் 83 சதவிதத்தை நாம் இறக்குமதி செய்கிறோம். இந்நிலையில், ஒபெக் நாடுகளிடம் இருந்து மட்டுமல்லாமல், அமெரிக்காவிடம் இருந்தும் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா அதிகரிப்பது, கச்சா எண்ணெய்யால் இந்தியாவிற்கு ஏற்படும் செலவுகளை சற்று குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனாவின் தாக்கம் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலையில் எதிரொலித்துள்ளது. ஆனால், கச்சா எண்ணெய் விலை குறைந்த அளவிற்கு பெட்ரோல் டீசலின் விலை இந்தியாவில் குறையவில்லை.

உதாரணமாக, 2019ஆம் ஆண்டு மே மாதம் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 71 டாலர் என்று இருந்தபோது, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல், 74 ரூபாய் 90 காசுகளாகவும் டீசல் விலை 71 ரூபாய் 27 காசுகளாக இருந்தன.

தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 56 டாலர், அதாவது, பேரலுக்கு சுமார் 15 டாலர் குறைந்துள்ள நிலையில், ஒரு லிட்டர் பெட்ரோல் அதே அளவான 74 ரூபாய் 81 காசுகள் என்ற நிலையிலேயே இருக்கிறது. டீசல் விலை 68 ரூபாய் 32 காசுகளாக உள்ளது.

Also see:

First published:

Tags: Crude oil, India, Trade, United States of America