உலகின் மிகப் பெரும் பொருளாதார நாடுகள் பட்டியலில் பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி இந்தியா 5ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. உலக நாடுகளின் பொருளாதார சூழல் குறித்து ஆய்வறிக்கையை சர்வதேச அமைப்பான ஐஎம்எஃப்(IMF) வெளியிட்டுள்ளது. அதன்படி, உலக நாடுகளின் ஜிடிபி வளர்ச்சி அதன் நிகர மதிப்பு ஆகியவற்றை டாலரின் அடிப்படையில் வைத்து கணக்கிடுகிறது.
கோவிட் பெருந்தொற்று பாதிப்பு காரணமாக ஒட்டுமொத்த உலக நாடுகளும் 2020,2021 ஆகிய ஆண்டுகளில் பெரும் பொருளாதார வீழ்ச்சியைக் கண்டுள்ளன. குறிப்பாக பிரிட்டன் நாட்டில் இதன் தாக்கம் மிக தீவிரமாக எதிரொலித்த நிலையில், அந்நாடு பாதிப்பில் இருந்து இன்னும் மீள முடியாமல் தவிக்கிறது.
குறிப்பாக, பிரிட்டனில் விலைவாசி உயர்வு பிரச்னை பெரும் சுமையாக மக்களை வாட்டி வதைக்கிறது. பிரிட்டனில் நெருக்கடி காரணமாக பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகிய நிலையில், புதிய பிரதமர் போட்டியில், ரிஷி சுனக்கை வீழ்த்தி லிஸ் ட்ரஸ் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பிரிட்டனை அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதமாக ஐஎம்எஃப் பொருளாதார அறிக்கை முடிவுகள் உள்ளன.
உலகின் டாப் பொருளாதார நாடுகளின் பட்டியலை புள்ளி விவரத்துடன் ஐஎம்எஃப் வெளியிட்டுள்ளது. அதில், பிரிட்டனை தாண்டி உலகின் 5ஆவது பொருளாதார சக்தியாக இந்தியா முந்தியுள்ளது. கடந்த காலாண்டு நிலவரப்படி, பிரிட்டன் நாட்டின் பொருளாதாரம் 814 பில்லியன் டாலராக உள்ள நிலையில், பிரிட்டனை விட அதிகமாக இந்தியாவின் பொருளாதாரம் 854.7 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு காலத்தில் பிரிட்டனின் காலணி நாடாக இருந்த இந்தியா தற்போது அந்நாட்டை பொருளாதாரத்தில் முந்தியுள்ளது. பிரிட்டனில் விலைவாசி உயர்வு காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி 2024ஆம் ஆண்டு வரை தொடரும் என அந்நாட்டின் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பென்ஷன் திட்டத்தில் மிகப்பெரிய மாற்றம்.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்!
அதேவேளை, இந்தியா பொருளாதாரமோ நடப்பாண்டில் 7 சதவீத வளர்ச்சியுடன் உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த இடத்தை இந்தியா தொடர்ந்து தக்க வைக்கும் என ஐஎம்எஃப் அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Britain, Economy, GDP, IMF, Indian economy