ரஷியாவில் இருந்து இந்தியாவிற்கு நிலக்கரி இறக்குமதி: இருநாட்டு அதிகாரிகள் பேச்சுவார்த்தை!
ரஷியாவில் இருந்து இந்தியாவிற்கு நிலக்கரி இறக்குமதி: இருநாட்டு அதிகாரிகள் பேச்சுவார்த்தை!
நிலக்கரி
coal supplies from russia | ரஷியாவில் இருந்து பெறப்படும் நிலக்கரி இறக்குமதியை இந்த ஆண்டு இரட்டிப்பாக்கி 9 மில்லியன் டன்களாக மாற்ற வேண்டும் என்று இந்தியா இலக்கு நிர்ணயம் செய்திருந்தது.
இந்தியாவில் உள்ள ஸ்டீல் தயாரிப்பாளர்களுக்கு கோக்கிங் நிலக்கரி ஏற்றுமதி செய்வதில் நிலவும் தடைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக இந்திய - ரஷிய அதிகாரிகள் கடந்த வாரம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேமெண்ட் முறைகளில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக இந்த விநியோகம் கடந்த மார்ச் மாதம் முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் மற்றும் வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாக ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுக்கான கோக்கிங் நிலக்கரி தேவையில் சுமார் 30 சதவீதத்தை ரஷியா ஏற்றுமதி செய்து வருகிறது. இந்நிலையில், ரஷியாவில் இருந்து பெறப்படும் நிலக்கரி இறக்குமதியை இந்த ஆண்டு இரட்டிப்பாக்கி 9 மில்லியன் டன்களாக மாற்ற வேண்டும் என்று இந்தியா இலக்கு நிர்ணயம் செய்திருந்தது.
இந்தியாவின் மொத்த தேவை
இந்தியாவிற்கு ஆண்டுதோறும் 50 முதல் 55 மில்லியன் டன் வரையிலான நிலக்கரி தேவைப்படும் நிலையில், ஏறக்குறைய 85 சதவீத தேவையை இறக்குமதி மூலமாக செய்து வருகிறது. இந்நிலையில், ரஷியாவிடம் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்வதற்கு கடந்த ஆண்டு இந்தியா ஒப்பந்தம் செய்தது.
ஆனால், ரஷியாவிற்கு எதிராக விதிக்கப்பட்ட பொருளாதார தடைகள் காரணமாக அந்நாட்டில் இருந்து நிலக்கரியை கொண்டு வருவதிலும், பணம் செலுத்தும் முறைகளிலும் சிக்கல் எழுந்தது. இதற்கு மாற்றாக ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ய இந்தியா நடவடிக்கை எடுத்த போதிலும், அதற்கான செலவினம் மிக அதிகமாக இருந்தது.
விலையை உயர்த்திய ஆஸ்திரேலியா
இந்தியாவிற்கு கோக்கிங் நிலக்கரி ஏற்றுமதி செய்வதில் முதன்மையான நாடாக ஆஸ்திரேலியா இருந்து வருகிறது. இந்த ஆண்டு ஒரு டன் நிலக்கரிக்கான விலையை 200 டாலரில் இருந்து 700 டாலராக அந்நாடு உயர்த்தியுள்ளது. அதே சமயம், ரஷியாவில் இருந்து மார்ச் மாதம் முதல் இறக்குமதி முழுவதுமாக தடைபட்டு விட்டது. இதனால், நிலக்கரி விநியோகம் குறித்து இந்தியாவில் உள்ள ஸ்டீல் தயாரிப்பாளர்கள் இடையே கவலைகள் அதிகரித்தன.
இந்தியா - ரஷியா பேச்சுவார்த்தை
ரஷியாவில் இருந்து மீண்டும் நிலக்கரி இறக்குமதியை தொடருவது தொடர்பாக இரு நாட்டு அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தின. அப்போது ரஷிய தரப்பு வர்த்தக அதிகாரிகள் பேசுகையில், தங்கள் நாட்டின் மீது மேற்குலக நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகள் குறித்த கவலையை வெளிப்படுத்தியதுடன், கடந்த ஆண்டு செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் வணிகத்தை இந்தியா தொடர வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். நிலக்கரியை எப்படி இலகுவாக ஏற்றுமதி செய்யலாம் என்பது குறித்து இந்திய தரப்பு அதிகாரிகள் நேரடியாக மாஸ்கோ வந்து திட்டமிடலாம் என்று ரஷிய அதிகாரிகள் அழைப்பு விடுத்தனர். அதே சமயம், நிலக்கரி விநியோகத்திற்கு சிறப்பான இன்சூரன்ஸ் அளிக்க வேண்டும் என்று இந்திய தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
Published by:Lilly Mary Kamala
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.